வாழைச்சேனையில் ஊரடங்கு தளர்த்துவது தொடர்பான தீர்மானம்
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படுவது நாளை அப்பகுதிகளில் மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகளின் அடிப்படையிலேயே அமையுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே. கருணாகரன் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு செயலணியின் ஐந்தாவது கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (16) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போது இப்பிரதேசங்களில் தொடராக கொரோனா தொற்றாளர்கள் இணங்காணப்பட்டு வருவதனால் நாளை மேலெழுந்தவாரியாக மேற்கொள்ளப்படவிருக்கும் பீசீஆர் பரிசோதனைகளின் முடிவுகள் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமை அதிகாலை பெறப்படும். அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி கூட்டப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படுமென அரசாங்க அதிபர் கருணாகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
இதுதவிர கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் 55 நபர்களும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப்பிரிவில் 8 நபர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் 6 நபர்களும், பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் இருவரும், கிரன், வெல்லாவெளி, ஓட்டமாவடி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுகளில் தலா ஒருவருமாக மொத்தம் 76 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் இப்பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 2378 பேருக்காக 10ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொட்டலங்களும், தொழில் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்தி 554 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுகளுமாக மொத்தம் 161 மில்லியன் ரூபா மாவட்ட செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, இராணுவ 231 ஆம் படைப்பரிவு அதிகாரி மேஜர் தம்பிக பண்டார, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர், கோறளைப்பற்று பிரதேச செலாளர் திருமதி. சோபா ஜெயரன்ஜித், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர், ஏ. மயூரன், கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளர் டாக்டர் எம். அட்சுதன், மாவட்ட தொற்று நோயியல் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் வே. குணராஜசேகரம் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
– Sathasivam Nirojan