மாமனிதர் சந்திரசேகரனின் புதல்வி அனுஷா தலைமையில் வெகுவிரைவில் புதிய கட்சி.
மாமனிதர் சந்திரசேகரனின் புதல்வி
அனுஷா தலைமையில் மலையகத்தில் வெகுவிரைவில் மலர்கிறது புதிய கட்சி.
மலையகத்தில் விரைவில் புதியதொரு அரசியல் கட்சி உதயமாகவுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தலைமையிலேயே இக்கட்சி மலர்கின்றது எனவும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படவுள்ளது எனவும் மேற்படி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
புதிய கட்சிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் யாவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன எனவும், மலையகத்தில் அரசியல் மற்றும் சமூகமாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் சிலரும் இக்கட்சியில் இணையவுள்ளன எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், புதிய கட்சியின்கீழ் இணைந்து செயற்படுவது தொடர்பில் மலையகத்திலுள்ள சில சிவில் அமைப்புகளும் தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றன.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேரடி சந்திப்புகள் இடம்பெறாத போதிலும், நவீன் தொழில்நுட்பம் வாயிலான கலந்துரையாடல்கள்மூலம் இதற்கான நடவடிக்கைகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளராக செயற்பட்ட அனுஷா சந்திரசேகரன், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கி 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருந்தார்.
எனினும், அவரைக் கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை மலையக மக்கள் முன்னணி எடுத்தது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய கட்சியை அனுஷா ஆரம்பிக்கின்றார். அதேவேளை, மலையக மக்கள் முன்னணியை என்றாவது ஒருநாள் கைப்பற்றுவேன் என அனுஷா சூளுரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது