யாழ்.நெல்லியடி பகுதியில் பூசகரின் வீட்டில் கொள்ளை.

யாழ்.நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரணவாய் கிராமத்தில் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல் ஒன்று கூரிய ஆயுதங்களுடன் பூசகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களைத் தாக்கிப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
கடந்த இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
கரணவாயில் உள்ள குறித்த வீட்டின் வெளிப் பகுதியில் முதியவர் ஒருவர் உறங்குவது வழக்கம். அவரை எழுப்பிய திருட்டுக் கும்பல் அவரைக் கடுமையாகத் தாக்கி கதவைத் திறக்க வைத்திருக்கின்றது.
அதன் பின்னர் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த அனைவரையும் தாக்கி அவர்களையும் ஒரு இடத்தில் இருத்திவிட்டு, வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடியுள்ளது.
அங்கிருந்த 10 இலட்சம் ரூபாவுக்கு அதிகமான நகை 30 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான பணம் என்பவற்றை கொள்ளையிட்டதுடன், அதே காணியிலிருந்த மற்றொரு வீட்டையும் திறக்கச் செய்து அதன் உள்ளேயும் தேடுதல் நடத்தி விட்டு தப் பிச் சென்றுள்ளது.
அங்கு வந்த கொள்ளையர்கள் வாள், கத்தி உட்பட்ட கூரிய ஆயுதங்களை வைத்திருந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸாரிடம் முறையிடப் பட்டுள்ளது. பொலிஸார் இரு வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.