சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிட அனுமதி !
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று திருக்கோவில் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப்பிரதேசங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான அனுமதி வழங்கப்படுவதாகவும், விரைவில் குறித்த ஆற்றுமுகப்பிரதேசத்தில் நிரந்தர அணைக்கட்டு (ஸ்பீல்) அமைப்பதற்கான அனுமதியும் கிடைக்கும் எனவும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சின்னமுகத்துவாரம் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடுதல் தொடர்பாகவும் அதில் உள்ள சாதக பாதகங்களை அறியும் நோக்குடனும் இன்று(17) இடம்பெற்ற அரச அதிகாரிகளின் உயர்மட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், ஆலையடிவேம்பு உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், மற்றும் அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ரி.விவேக்சந்திரன், உள்ளிட்ட உயர் அரச அதிகாரிகள் விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் மீனவர் சங்க உறுப்பினர்கள் களப்பு முகாமைத்துவ குழுவின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் ஆகவே சின்னமுகத்துவார ஆற்றுமுகப்பிரதேசத்தை அகழ்ந்து மேலதிக நீரை வெளியேற்றி வயல் நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த திருக்கோவில் பிரதேச செயலாளர், இரண்டு முகத்துவாரங்கள் உள்ள நிலையில் முதலில் சின்னமுகத்துவாரத்தை அகழ்ந்து விடலாம்; என கூறினார். இதேநேரம் இங்கு கருத்து வெளியிட்ட அக்கரைப்பற்று நீர்ப்பாசன பொறியியலாளர் ரி.விவேக்சந்திரன், மழை பெய்வதற்கான அதிக வாய்ப்பும் களப்பில் தேவைக்கதிகமான நீரும் உள்ளதால் முகத்துவாரத்தை அகழ்ந்து விடுவது பொருத்தமானது என கூறினார்.
இறுதியாக சகல தரப்பு கருத்து மற்றும் நியாயத்தின் அடிப்படையில் சின்னமுகத்துவாரம் அகழ்ந்துவிடப்படும் எனவும் இந்த பிரச்சினை நீண்ட காலமாக இருப்பதனால் இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் இப்பகுதியில் ஸ்பீல் அமைக்கப்பட்டு இதற்கான நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கூறினார்.
இந்நிலையில் ஆற்றுமுகப்பிரதேசம் அகழ்ந்துவிடப்படுவதற்கான நடவடிக்கை ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கண்காணிப்பில் நாளை காலை இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டது.
இதேநேரம் கடந்த சில நாட்களாக அம்பாறையில் பலத்த மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .