ஐ.நா. உயர்மட்டத் தலைவர் விரைவில் கொழும்பு வருகை!

ஐ.நா. உயர்மட்டத் தலைவர்
விரைவில் கொழும்பு வருகை!
முக்கிய சந்திப்புக்களில் பங்கேற்பு.
ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டப் பிரதிநிதியொருவரை செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ், விரைவில் இலங்கைக்கு அனுப்பவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதன்படி ஐ.நாவின் அரசியல் பிரிவுத் தலைவர் ரோஸ்மேரி டிகார்லோவே (Rosemary A. DiCarlo) கொழும்பு வரவுள்ளார் எனவும், இங்கு உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபடுவார் எனவும் தெரியவருகின்றது.
ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட சில சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் அவர் சந்திப்புகளை நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளார். அனைத்துச் சந்திப்புகளும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியிலேயே இடம்பெறவுள்ளது.
ஐ.நாவின் கிளை அமைப்புகளுள் ஒன்றான மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு விலகியுள்ள நிலையில், பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துவதை மையப்படுத்தியே ரோஸ்மேரி டிகார்லோவின் இலங்கை பயணம் அமையும் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.