விமான நிலையத்தின் 2 ஆம் முனையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பம்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2 ஆம் முனையத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பம்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 2 இற்கான ( Terminal 2) கட்டுமான பணிகள் இன்று (18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
இந்த 2 ஆம் முனையத்தின் அபிவிருத்தி திட்டத்திற்கு ஜப்பான் முதலீடு செய்துள்ளதுடன் இதனை மூன்றாண்டுகளுக்குள் கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பயணிகள் முனையம் 60 இலட்சம் பயணிகளைக் கையாளவே போதுமானதாக உள்ளமையால், பயணிகள் நடவடிக்கைகளுக்கு போதுமான முனைய வசதிகள் இல்லாதது ஒரு பிரச்சினையாக உள்ளது.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (ஜெய்கா) இதன் நிதி வழங்குனராக செயற்படுகிறது. ஜப்பானின் டாய்சேய் நிறுவனம் திட்ட ஒப்பந்தக்காரராக செயல்படுகிறது. பணிகள் நிறைவடைந்தவுடன் 90 இலட்சம் பயணிகள் திறனை கொண்டதாக செயற்படவுள்ள இதன் மொத்த கடன் தொகையில் 100 வீதமும் விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தினால் செலுத்தப்படும்.
நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ள இத்திட்டத்தில், வருகைத் தரும் மற்றும் வெளியேறும் பயணிகளை வேறுபடுத்தல், மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டுப்பாட்டு அமைப்பு, பல மாடிகளை கொண்ட வாகன நிறுத்துமிடங்களிலிருந்து விமான நிலையத்திற்கு நேரடியாக வருகை தரல் மற்றும் வெளிச் செல்லும் வசதி, பெரிய விமானங்களின் பயணங்களுக்கென (Airbus A-380) ஒதுக்கப்பட்ட பயணிகள் நுழைவாயில், சிறப்பு விருந்தினர் ஓய்வறை, விமான பணியாளர் ஓய்வறை – வருகைகள் மற்றும் புறப்பாடு, நுழைவாயில்களை அண்மித்த ஓய்வறைகள், சுங்க வரிகள் அற்ற கடைகள், உணவகங்கள், பார்வையாளர் கூடம் முதலியவற்றை உள்ளடக்கிய முழுமையான தளவமைப்பைக் கொண்டுள்ளன.
இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக, இராஜாங்க அமைச்சர்களான இந்திக அநுருத்த, நிமல் லன்சா, தாரக பாலசூரிய, நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான சஹன் பிரதீப், கோகிலா குணவர்தன, நளின் பெர்னாண்டோ, இலங்கை விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் .எஸ்.ஹெட்டிஆராச்சி, விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.