வடக்கில் ஒரு இலட்சம் படையினர்; பிரிக்கப்பட்ட நாட்டில்தான் தமிழர்! நாடாளுமன்றில் சிறிதரன்
பிரிக்கப்பட்ட நாட்டில்தான் தமிழர்!
நாடாளுமன்றில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு
“ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் வடக்கில் உள்ளனர். சொந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சுதந்திரமான வாழ்க்கையும் இல்லை. இயல்பாகவே வடக்கு மக்கள் – அங்குள்ள தமிழ் மக்கள் பிறிதொரு நாட்டில் வாழும் உணர்விலேயே இருக்கின்றனர்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கோட்டா – மஹிந்த அரசால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டமும், போருக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வரவு – செலவுத் திட்டமாகக் காணப்படுகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வரவு – செலவுத் திட்டம் மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“படைக்காக 355.159 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்த பாதீட்டில் 13.26 வீதம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதாரத்துறைக்கு 159.476 மில்லியன் அதாவது 5.95 வீதமும், கல்வித்துறைக்கு 4.47 வீதமே ஒதுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியதாகும்.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத் துப்பரவுப் பணிகளில் பொலிஸார் இடையூறுகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கச்சேரியில் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வில் சமூக இடைவெளியின்றி நிகழ்ச்சி அரங்கேறியது. னகபுரம் துயிலும் இல்லத்தில் 30 இற்கும் குறைவானவர்கள் இணைந்து துப்பரவு செய்தபோதே பாதுகாப்புப் படைக்குக் கொரோனா என்கின்ற விடயம் கண்களுக்குத் தென்பட்டது.
ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் வடக்கில் உள்ளனர். சொந்த நிலங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. சுதந்திரமான வாழ்க்கையும் இல்லை. இயல்பாகவே வடக்கு மக்கள் – தமிழ் மக்கள் பிறிதொரு நாட்டில் வாழும் உணர்விலேயே இருக்கின்றனர்.
வலிந்து காணாமல் ஆ க்கப்பட்டவர்களின் பெற்றோர் 1,400 நாட்களுக்கும் மேல் வீதிகளில் அமர்ந்து போராடிவருகின்ற நிலையில், அரசால் ஏன் இதுவரை பதிலளிக்கமுடியவில்லை?
ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர் என்று மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் பரணகம ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார். அதுவும் அப்படியே.
நாமல் ராஜபக்ச சிறையிலிருந்து வெளியே வந்தபோது தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார். இதுவரை நடவடிக்கை இல்லை” – என்றார்.
இதேவேளை, சிறிதரன் எம்.பியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா சபையில் எழுந்து உரையாற்றினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளே அழிவை ஆரம்பித்தார்கள் என்று அவர் சபையில் தெரிவித்தபோது, குறுக்கீடு செய்த சிறிதரன் எம்.பி, 1950களில் தமிழ் மக்கள் மீது தரப்படுத்தலை அரசே கொண்டுவந்தது என்று சொல்லத் தொடங்கினார்.
எனினும், சட்டப்பிரச்சினை இல்லை என்று சபைக்குத் தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்து, அநுரபிரியதர்சன யாப்பா எம்.பிக்கக் கருத்துத் தெரிவிக்க இடமளித்தார்.