சசிகலா விடுதலையாகி ஜனவரியில் வெளியே வரலாம்”
சசிகலா தரப்பில், 10 கோடி ரூபாய் அபராதத் தொகையைச் செலுத்தியதன் மூலம் அவரை சிறையில் இருந்து விடுதலை பெறச் செய்யும் நடைமுறயை அவரது அணியினர் தொடங்கியிருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சசிகலா தரப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பெங்களூரு நகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில், இரண்டு டிமாண்ட் டிராஃப்ட்களைச் செலுத்தி இருப்பதாக கூறுகிறது, அந்த நாளிதழ்.
அடுத்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை ஆக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை பணத்தைச் செலுத்தப்படாதிருந்தால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதிவரை சசிகலாவின் சிறை தண்டனை நீடிக்கலாம் என்றும் முன்பு தகவல் உரிமைச் சட்டம் மூலம் சிறை நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட பதிலில் தெரிய வந்தது.
இதே வேளை, கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா விடுதலை விவகாரத்தால் கட்சித்தலைமை தொடர்பாக தற்போது அதிமுக கொண்டுள்ள நிலைப்பாட்டில் எந்த தாக்கமும் ஏற்படாது என்று தெரிவித்தார்.
ஆனால், சசிகலாவின் விடுதலை மூலம் தமிழக அரசியலில் தாக்கம் இருக்கும் என்று அவரது உறவினர் டி.டி.வி. தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தித்தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறினார். தனது அரசியல் உத்தி குறித்து சசிகலாவே வெளிப்படுத்துவார் என்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.