வெளிநாடுகளில் சிக்கியுள்ள எம் உறவுகளை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுங்கள்.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள எம் உறவுகளை
நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுங்கள்

வெளிவிவகார அமைச்சரிடம் சாணக்கியன் எம்.பி. கோரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்துப் பேசியபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான மகஜர் ஒன்றையும் இரா.சாணக்கியன் எம்.பி., வெளிவிவகார அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

சந்திப்பு தொடர்பில் சாணக்கியன் எம்.பி. தெரிவித்ததாவது:-

“சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்களுக்குச் செல்ல முடியாமலும், மூன்று வேளை உணவின்றியும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகத் தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்தநிலையிலேயே குறித்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்குக் கொண்டு வந்தேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.