தமிழினத்தின் விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்.
தமிழினத்தின் விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்
சபையில் கூட்டமைப்பு சீற்றம்
“தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து கொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது. மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் இன்றைய செயற்பாடுகளும் சிங்கள மயமாக்கலை நோக்கியதாவே உள்ளது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் போர் இடம்பெற்ற வேளையில் தலைமை தாங்கிய பிரதான தலைவர்கள் இருவருமே இன்று ஆட்சியில் உள்ளனர். இவர்களின் தலைமையில் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு எந்தவித திருப்திகரமான நிவாரணங்களையும் முன்வைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்களின் கிராமங்களை மீள் கட்டுமானம் செய்யவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதேபோல் இந்த வரவு – செலவு திட்டத்தில் மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்ட அமைச்சுக்களான சுகாதாரம், கல்வி, விவசாயம், நீர்ப்பாசனம், கடற்தொழில் அமைச்சுக்களுக்கு என ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டுள்ள நிதிக்கு சமமான நிதியைப் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கியுள்ளனர்.
இலங்கை அபிவிருத்தியடைய வேண்டும் என்றால், வரவு – செலவுத் திட்டத்தில் துண்டுவிழும் தொகை இல்லாதிருக்க வேண்டுமானால் இந்த நாட்டில் சகல இன மத மக்களும் சமமாக நடத்தப்படக்கூடிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்தச் சபையில் தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன சில கருத்துக்களை கூறியிருந்தார். இதற்கு எமது தரப்பு நியாயங்களை சபையில் முன்வைக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
தமிழர்களின் தாயக பிரதேசங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை அரச தரப்பினர் எவ்வாறு குறைத்தனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
1970ஆம் ஆண்டு மாசி மாதம் 28 ஆம் திகதி மகாவலி அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டு அடுத்த மாதமே நாடாளுமன்றம் அதற்கான அங்கீகாரத்தையும் கொடுத்தது. அன்றில் இருந்து இப்போது வரையில் 50 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் 40 வீதம் தமிழர்களின் இன விகிதாசாரத்தை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை அழித்துள்ளது.
இதில் குறிப்பாக 1988 ஆம் ஆண்டு மகாவலி எல் வலயத்தின் ஊடாக வடக்கில் முல்லைத்தீவு, வவுனியா பிரதேசங்களை வர்த்தமானி அறிவித்தல் மூலம் கையகப்படுத்தி, அதேபோல் 2008 ஆம் ஆண்டு இரண்டாம் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தமிழர்களின் பூர்வீக நிலங்களை, கிராமங்களை சிங்கள பெயர்களாக மாற்றினர். அதேபோல் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழர்களுக்கு 1960 ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நில உறுதிப்பத்திரத்தை எமது மக்கள் வைத்துக்கொண்டுள்ள நிலையில் அந்தக் காணிகள் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் பறிக்கப்பட்டு சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் எமது மக்களுக்கு மாற்றுக் காணியோ வேறு ஏதும் நடவடிக்கையோ இல்லாத சூழ்நிலை காணப்படுகின்றது.
தமிழர்களின் இன விகிதாசாரத்தை அழித்து வடக்கு, கிழக்கில் சிங்கள குடியேற்றங்களைச் செய்துகொடுக்கவே மகாவலி அதிகார சபை உருவாக்கப்பட்டது. சிங்கள ஆட்சியாளர்களின் மோசமான சிந்தனையின் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இதுவாகும். இதுதான் ஆயுதப் போராட்டம் உருவாகவும் காரணமாக அமைந்தது.
தமிழர்களை நேரடியாக அழித்த காரணத்தால் அன்றைய சூழலே எமது இளைஞர்களை ஆயுதம் ஏந்தவைத்தது. மாறாக எவரும் விரும்பி ஆயுதத்தை ஏந்தவில்லை. இன்றும் சிங்கள ஆக்கிரமிப்புகளில் எமது பிரதேசங்கள் சிக்கிக்கொண்டுள்ளன. நிலங்களை அபகரித்து இராணுவத்துக்குக் கொடுக்கும் நடவடிக்கைகளையே அரசு முன்னெடுத்து வருகின்றது” – என்றார்.