கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்.
கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் நிறைவேறியது.
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத்திட்ட அமர்வு நேற்று(19) தவிசாளர் கனகையா தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர் வரவு செலவுத் திட்டமானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இச் சபை அமர்வின்போது பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் கட்டாக்காலி கால்நடைகளை பிடிப்பதற்காக சென்ற பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கால்நடை வளர்ப்பாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆதரவாக பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் பொலிஸ் நிலையம் சென்று அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான வாதப் பிரதிவாதங்களும் இச்சபை அமர்வில் இடம்பெற்றது.
மேலும் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் உடனான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு இருந்த போதிலும் நீராவி பிட்டிச்சந்தையில் நடைபாதை வியாபாரிகளை கட்டுப்படுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழ் உள்ள கரைதுறைப்பற்று பிரதேச சபை
மொத்தமாக 24 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இன்றைய அமர்வில் மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்றைய வரவு செலவுத் திட்டமானது நிறைவேற்றப்பட்டுள்ளது.