“சூரரைப் போற்று: ரௌத்திரம் பழகு” – கருணாகரன்

காந்தி முன்னெடுத்த அரசியல் கோட்பாடும் வழிமுறையும் இன்று அடையாளமற்றுப் போய் விட்டன. பதிலாக அவற்றின் பெறுமதிகள் அழிக்கப்பட்டு வணிகமாக்கப்பட்டிருக்கிறது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது காந்தியை முன்வைத்த வணிக அரசியலே. இதற்குக் காந்தியும் காந்தியமும் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வளவுதான்.  

 

இப்படியே பெரியார் முன்னிறுத்திய பகுத்தறிவு வாதமும் திராவிடக் கொள்கையும் பின்வந்தோரால் பயன்படுத்தப்படுகிறது. பெரியாரும் பெரியாரியமும் மெல்ல மெல்ல மறைக்கப்பட்டு, அவற்றைத் தமது அரசியல் உபயோகத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் போக்கு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

காந்தியையும் பெரியாரையும் உரிய முறையில் முன்னெடுப்பதாக இருந்தால் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு அவர்கள் தங்களை உருவாக்கிக் கொண்டனர்? வரலாற்றையும் தாம் வாழ்கின்ற சமூகச் சூழலையும் எப்படி விஞ்ஞானபூர்வமாக அணுகித்  தங்கள் கொள்கையை வடிவமைத்தனர்? அதற்கமைய தங்களுடைய வாழ்க்கையை எப்படி ஒழுங்கமைத்தனர்? சவால்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டனர்? அதற்கான திராணியையும் உறுதிப்பாட்டையும் எப்படிக் கொண்டிருந்தனர் என்றெல்லாம்  அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை நிகராகக் கொள்ள வேண்டும். அதற்கமையத் தம்மை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

 

அவர்களுடைய வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. கடுமையானது. அந்தச் சவால்களையும் கடுமையையும் தங்களுடைய அர்ப்பணிப்பான வாழ்க்கையினாலும் அரசியல் நேர்மையினாலுமே எதிர்கொண்டனர்.  அதில் கிடைத்த வெற்றியே அவர்களின் அடையாளம். அவர்களுடைய அரசியலுக்கான மதிப்பு.

 

ஆனால். இன்று அவர்களை முன்னிறுத்தி அல்லது அவர்களைப் பிரதிபலித்து அரசியல் செய்வோர் அந்தக் “கடுமையை” எதிர்கொள்ள முடியாதவர்களாகவே உள்ளனர். அதற்கேற்பத் தம்மை அர்ப்பணிக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் தமக்கு வாய்ப்பான விதத்தில் அவர்களையும் அவர்களுடைய கொள்கைகளையும் பயன்பாட்டுப் பொருளாக்கிக் கொண்டனர். இதற்கு காந்தியும் பெரியாரும் மக்களிடத்தில் பெற்றிருக்கும் குறையாத மதிப்பையும் அபிமானத்தையும் பயன்படுத்துகின்றனர்.

 

ஏறக்குறைய இதை ஒத்த போக்குத்தான் ஈழச்சூழலிலும் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. ஈழச் சூழல் என்பது புலம்பெயர் சூழலையும் உள்ளடக்கியதே. 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழீழத்தை அடைவதற்கான  அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்திப் போராடிக் கொண்டிருந்தது. அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அது தன்னுடைய செயற்பாடுகளை முன்னெடுத்தது.

புலிகளின் செயல்முறை என்பது அவர்களுடைய அரசியலை, அதன் இலக்கை நோக்கிய செயற்பாடாகும்.  இது தேசம் ஒன்றைப் பற்றியது என்ற வகையில் அந்தத் தேசத்தை உருவாக்குவதற்கான அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படைகள் தேசத்துக்கான கட்டுமானங்களை உள்ளடக்கியவை. இதற்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்படுவதே புலிகளின் பண்பு. இந்த அர்ப்பணிப்புப் பண்பு  கடுமையானது. அசாதாரணமான கடுமை இது. இதுவே மக்களிடத்தில் அவர்களுக்குக் குன்றாத மதிப்பை உண்டாக்கியுள்ளது. புலிகளிடத்திலிருக்கும் குறைபாடுகள், விமர்சனங்களை எல்லாம் மக்களின் மனதிலிருந்து இது மேவுகிறது. இதைக்குறித்த மாற்று அபிப்பிராயங்களும் விமர்சனங்களும் அரசியல் ரீதியாக யாருக்கேனும் இருக்கலாம்.

 

ஆனால், தாம் வலியுறுத்தி முன்னெடுத்த அரசியல் கோட்பாட்டுக்கு செயற்பாட்டு வடிவம் கொடுப்பதற்குத் தம்மை அர்ப்பணித்ததே புலிகளின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்பதை மறுக்க முடியாது. இன்று புலிகளுக்கு மக்களிடம் உள்ள மதிப்புப் பெறுமானம் என்பதற்கு இது முக்கியமான காரணம்.

Death of the Tiger | The New Yorker

இந்த மதிப்புப் பெறுமானத்தையே 2009க்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியலை முன்னெடுப்போரும் புலிகளைக் கொண்டாடுவோராகக் காட்டிக்கொள்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை மாவீரர் நாள் நிகழ்விலிருந்து முள்ளிவாய்க்கால் நினைவு கூரல்வரையில் காணலாம். இங்கே புலிகளின் செயல்முறையும் அதற்கான அர்ப்பணிப்பும் மனதில் கொள்ளப்படுவதில்லை. பதிலாக தமக்கு வாய்ப்பான பகுதிகளே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 

 ஆனால், இன்று புலிகளின் அரசியல் தொடர்ச்சியை முன்னெடுக்க விரும்புவோர் அல்லது புலிகளின் அரசியல் தொடர்ச்சியாகத் தம்மை அடையாளப்படுத்துவதற்கு விரும்புவோர் புலிகளைப் புரிந்து கொண்டு, அதற்கான மதிப்புடன் அரசியலை முன்னெடுக்க வேண்டும். அதுவே சரியானது. அதுவே நிகரானது. ஆனால், அப்படி நிகழவில்லை.

 

புலிகளின் தியாகத்தையும் அந்தத் தியாகத்தைப் போற்றுவதற்கு அவர்கள் உருவாக்கிய மாவீர் என்ற அடையாளத்தையும் அந்த அடையாளத்தைக் கொண்டாடும் மாவீர் நாள் என்ற நிகழ்வையும் பயன்படுத்த விளைகின்றனர். கூடவே அவர்கள் உருவாக்கிப் பின்பற்றிய நினைவு கூருதல் என்ற அரசியல் முறையையும். இதற்கு அப்பால் எதையுமே அல்ல. ஒரு சிலர் மட்டும் புலிகள் மாவீர் நாளை முன்னிட்டுத் தொடர்ந்து வந்த மரநடுகையைச் செய்கின்றனர். அதுவும் கூட ஒழுங்கமைக்கப்பட்டதாக இல்லை.

 

புலிகளின் மர நடுகை என்பது மரங்களின் தோப்பு அல்லது காடு வளர்ப்பு என்பதாகவே இருந்தது. குறிப்பிடப்படும் இடங்களைத் தேர்வு செய்து அந்த இடங்களில் மரநடுகைகளைச் செய்தனர். அவை இன்று தோப்புகளாகவும் காடுகளாகவும் வளர்ந்திருக்கின்றன. வீதியோர மரநடுகை போன்றனவும் வெற்றியளித்தனவாகவே உள்ளன. இதற்குக் காரணம், மரநடுகை என்பதை அவர்கள் மரம் வளர்ப்பு, காடு வளர்ப்பு என்று இதைப் பிரக்ஞை பூர்வமாகக் கொண்டிருந்தமையே ஆகும். அப்படிப் பிரக்ஞை பூர்வமாகக் கொண்டு முன்னெடுக்கப்படாத எந்தச் செயற்பாடும் உரிய விளைவுகளை உருவாக்குவதுமில்லை. மதிப்பைப் பெறுவதுமில்லை.

 

எனவேதான் புலிகளின் மதிப்பான பகுதிகளை இவர்கள் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பதை அழுத்தமாகக் குறிப்பிட வேண்டியுள்ளது. அதுவும் இந்த  மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படும் நாட்களில் இதைப்பற்றிய உரையாடலை ஆரம்பித்தே ஆக வேண்டும். அது புலிகளுடைய செயற்பாட்டுத் திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் அளிக்கின்ற மதிப்பாக இருக்க முடியும்.

 

புலிகள் மாவீரர் நாள் என்ற நிகழ்வை உருவாக்கும்போதும் நினைவு கூருதல்களைக் கடைப்பிடிக்கும்போதும் பல காரணங்களும் தேவைகளும் இருந்தன. புலிகளுடைய போராட்டமானது கடுமையான சவால்கள் நிறைந்தது என்பதாலும் விட்டுக் கொடுப்பற்ற அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டது என்பதாலும் உயிர்த்தியாகங்களையும் செய்ய வேண்டியிருந்தது. இந்த உயிர்த்தியாகம் என்பது ஒன்று இரண்டுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. சாதாரணமான உயிரிழப்பாக நிகழ்ந்ததுமில்லை. ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிரிழப்பில் நிகழ்ந்தது. தம்முடைய உடலை வெடித்துச் சிதறும் அளவுக்கு உக்கிரமானதாக இருந்தது. எனவேதான் இத்தகைய உயிர்த்தியாகத்தை அவர்கள் மகத்தானதாக, மாவீரர் தகமையுடையதாகக் கொண்டனர். பாரதியாரின் வார்த்தைகளில் சொன்னால் சாதனையாளரை, செயற்கரிய மாவீரரை, அசகாய “சூரரைப்போற்று”  என்பதாக வடிமைக்கப்பட்டது.

 

இதன் தொடர்ச்சியாக மேலும் மேலும் போராடும் ஆற்றச் சிறப்பையும் திறனையும் அர்ப்பணிப்பு உணர்வையும் போராளிகளிடத்திலும் இளைய தலைமுறையினரிடமும் அதிகரிக்க விரும்பினர். இழப்புகளுக்குரிய பெறுமதியை அவற்றுக்கு மாண்பளிப்பதன் வழியாக உருவாக்கினர். அதைச் சமூகப் பெறுமானமாக, மதிப்பாக ஆக்கினர். அந்தப் பெறுமானத்தைக் கொண்டு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்தனர். அது அவர்களுடைய அரசியல் வழிமுறை. செயற்பாடும் கோட்பாடும் கோட்பாடும் செயற்பாடுமாக இணைந்த வழிமுறையாக இருந்தது.

 

இன்றைய அரசியல் முன்னெடுப்பாளர்களும் புலிகளைப் பின்பற்றுவோரும் கொண்டிருக்கும் செயற்பாடுகளும் வழிமுறைகளும் வேறானவை. இவர்கள் தமக்கிசைவான முறையில் எல்லாவற்றையும் உருமாற்றி வடிவமைக்க முற்படுகின்றனர். அல்லது தம்மை அவற்றுடன் பொருத்திக் கொள்ளப் பார்க்கின்றனர். முக்கியமாக கடுமையற்ற விதமாக. செயற்பாட்டுத்திறனும் உறுதியற்றதுமாக.

 

இதனால்தான் இவை இன்று மதிப்பிறக்கம் செய்யப்படுவதாக உள்ளதெனக் கண்டனத்தைச் சந்திக்கின்றன. விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன. கன்ஸன்தீன் ஸீமனவ்வின் “போர் இல்லாத இருபது நாட்கள்” நாவலில் சொல்லப்படுவதைப்போல, “போரின் வெற்றிக்கு போரிட வேண்டும். அதற்காகப் பாடுபடவே வேண்டுமே ஒழிய, போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதோ, வொட்கா அருந்திக் கொண்டு அதைப்பற்றிப் பேசுவதோ அல்ல” என்பது இதை ஒத்த விமர்சனமே.

 

இதன் அர்த்தம் இப்போதும் போரை முன்னெடுப்பது என்பதல்ல. முன்னெடுக்கப்படும் அரசியலில் தெளிவும் உறுதியும் செயற்பாட்டுத்திறனும் அதற்கான அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும் என்பதேயாகும்.

 

2009 க்குப் பின்னர் மாவீரர் நாள் என்பது இலங்கையின் வடக்குக் கிழக்கில் அரசியலை முன்னெடுப்போர் தமது அரசியல் நலன்களுக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் கடந்த ஆண்டுகளில் இதையிட்ட கண்டனங்களும் விமர்சனங்களும் கடுமையான முறையில் போராளிகளாகச் செயற்பட்டோரினாலும் மாவீரர் குடும்பங்களினாலும் முன்வைக்கப்பட்டன. இதைக்குறித்த விமர்சன ரீதியான இலக்கியக் குரல்களும் எழுந்தன. இதுவே முள்ளிவாய்க்கால் நினைவு கூரல், திலீபன் நினைவு கூருதல் போன்றவற்றிலும் உள்ளது.

 

ஏறக்குறைய இதை ஒத்த நிலையே புலம்பெயர் சூழலும் நிலவுகிறது. மாவீரர் நாளை கேளிக்கை நிகழ்வாக, அரசியற் செல்வாக்குக்குரிய நடவடிக்கையாக மாற்றும் முயற்சிகள். 2009 க்குப் பின்னர் புலம்பெயர் சூழலில் இயங்கும் புலிகளின் முன்னாள் செயற்பாட்டாளர்களும் அமைப்புளும் போராளிகளாக இருந்தோரும் வெவ்வேறு அணிகளாக மாவீரர் நாள் நிகழ்வைக் கடைப்பிடித்ததை இங்கே நினைவு படுத்தலாம். இதைப்போலவே பல பங்குச் சண்டைகள்.

 

மாவீரர் நாள் நிகழ்வு, பிற நினைவு கூரல்கள் மட்டுமல்ல, புலிகளின் அடையாளத்தை எந்த வகையில் எல்லாம் தங்கள் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு அவற்றைப் பயன்படுத்தும் போக்கு வளர்ச்சியடைந்துள்ளது. இதெல்லாம் போராளிகளையும் மாவீர்களின் குடும்பங்களையும் கவலையடையச் செய்யும் காரியங்கள். எனவேதான் இதைக் குறித்த விமர்சனங்களும் கண்டனக்குரல்களும்  முன்வைக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்  யாவரும்.கொம் இணையத்தளத்தில் வெளியாகிய ப. தெய்வீகனின் “பொதுச்சுடர்” என்ற கதையும் இத்தகைய போக்குகளுககு எதிரான விமர்சனத்தை உட்தொனியாகக் கொண்டதே. இதையும் பாரதியின் வார்த்தைகளில் சொல்லலாம், “நடிப்புச் சுதேசிகள்” மீதான எதிர்ப்புக்குரல்  என.

 

இந்த நிலையை மாற்றி, மாண்புறு வழியைத் தேர்வதென்றால், “ரௌத்திரம் பழகு” என்றபாரதியின் சொல்லே வேதமாக வேண்டும். நிச்சயமாக நம் நெற்றிக் கண்ணைத் திறந்தே ஆக வேண்டும். அந்தச் சுடரில் விளக்கேற்றுவதே மாவீரைப் போற்று, சூரரைப்போற்று என்பதாக அமையும்.

Leave A Reply

Your email address will not be published.