யாழ். பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக கருத்துத் தெரிவித்ததைக் கண்டிக்கின்றேன் : அங்கஜன்


யாழ். பொலிஸ் அதிகாரி அரசியல்வாதியாக
கருத்துத் தெரிவித்ததைக் கண்டிக்கின்றேன்

ராஜபக்சக்களின் சகா அங்கஜன் எம்.பி. போர்க்கொடி

முப்பது வருட கால கொடிய போரால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவு பஞ்சத்தால் உயிர்நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என யாழ். பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்த கருத்துக்குக் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கடந்த காலங்களில் இடம்பெற்ற போர்ச் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கான நினைவேந்தலை தடைசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் முன்னிலையாகிய குறித்து பொலிஸ் நிலைய அதிகாரி, தமிழ் மக்களின் உண்ணும் உணவுகளைக்  கொச்சைபடுத்தும் முகமாக “சோறும், புட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்” என்று கூறியிருந்தார்.

முப்பது வருட கால கொடிய போரால் துயருற்ற எமது மக்கள் அக்காலத்தில் கூட உணவுப் பஞ்சத்தால் உயிர்நீத்த சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். பொலிஸ் துறையில் உயர் பதவியில் இருப்போர் இன ஐக்கியத்தைக் குழப்புவதும் மற்றும் தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கருத்துக் கூறுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களைத் தேர்தலின்போது உசுப்பேத்தி அரசியல் சுயலாபம் தேடுகின்ற அரசியல்வாதிகளுக்கு இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை ஏமாற்றுவதற்குப் பக்கபலமாக அமைந்து விடும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.