கொழும்பிலிருந்து மரண வீட்டுக்கு வந்த குடும்பப் பெண் : கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று
கொரோனாவுடன் கொழும்பிலிருந்து
மரண வீட்டுக்கு வந்த குடும்பப் பெண்
கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பரிசோதனைக் கூடத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் கிளிநொச்சியில் நடைபெற்ற மரணச் சடங்குக்காகக் கொழும்பிலிருந்து வந்த பெண்ணாவார்.
நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் நடைபெற்ற மரணச் சடங்கு ஒன்றுக்கு கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பகுதியிலிருந்து பெண்ணொருவர் வந்துள்ளார் என்று பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து குறித்த பெண்ணை உடனடியாகவே சுகாதார உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை இன்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மரண வீட்டுக்கு வந்தவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் களமிறங்கியுள்ளனர்.
இறந்தவரின் இறுதிக்கிரியை எந்தவித சடங்குகளும் இன்றி நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது எனப் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, கண்டாவளையில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த ஒருவருக்கும் இன்றைய பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.