மாவீரர் நினைவேந்தல் வாரம் : பண்டிதரின் திருவுருவப்படத்துக்கு சுமந்திரன் விளக்கேற்றி அஞ்சலி
மாவீரர் நினைவேந்தல் வாரம்
உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்
பண்டிதரின் திருவுருவப்படத்துக்கு
தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடி தமது உயிரை ஈந்த வீரமறவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் மாவீரர் வாரம் தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இந்தநிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளியான கப்டன் பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் திருவுருவப்படத்துக்கு அவரது தாயாரோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சுடர் ஏற்றி – மலர் தூபி அஞ்சலி செலுத்தினார்.
இம்முறையும் மாவீரர் நாளில் அவரைத் துயிலும் இல்லம் சென்று நினைவுகூருவதற்கு யாரும் தடை விதிக்கக் கூடாது எனக் கோரி அவரது தாயாரான மகேஸ்வரி, யாழ். மேல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த போதிலும் அது நேற்று தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்தநிலையில், கம்பர்மலையில் வசிக்கும் கப்டன் பண்டிதரின் தாயாரின் இல்லத்துக்கு இன்று காலை சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பண்டிதரின் திருவுருவப் படத்துக்கு அவரின் தாயாருடன் இணைந்து சுடர் ஏற்றி – மலர் அஞ்சலி தூபி செலுத்தினார்.
இதேவேளை, “தமிழர் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதை எவரும் தடை செய்யக் கூடாது எனக் கப்டன் பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டார்.
“எனது மகன் உயிர்நீத்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுகின்றேன். துயிலும் இல்லத்துக்குச் சென்று மகனுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவேன். இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதைத் தடைசெய்யக் கூடாது என்றே யாழ். மேல் நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. எனவே, நான் வீட்டில் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதை யாரும் தடை செய்யக் கூடாது என மன்றாட்டமாகக் கேட்டுகொள்கிறேன்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.