குருநாகல் தபால் நிலையத்தில் கொரோனா! சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்.

குருநாகலில் தபால் நிலையத்துக்குள்ளும் புகுந்தது கொரோனா! 14 ஊழியர்களுக்குத் தொற்று!! –  மாவட்ட தபால் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் மீள அறிவிக்கும் வரை மூடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் சேவைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன எனவும் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிவித்தலொன்றை விடுத்துள்ள அவர், குருநாகல் பிரதேச தபால் அத்தியட்சகர் அலுவலகம் மற்றும் குருநாகல் தலைமை தபால் நிலையத்தின் 14 ஊழியர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரப் பிரிவின் ஆலோசனைக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குருநாகல் மாவட்டத்தில் தபால் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மருந்து விநியோக நடவடிக்கைகளுக்காக, ஒரு சில ஊழியர்கள் ஏனைய தபாலகங்கள் மற்றம் உப தபாலகங்களுக்குச் சென்று வந்துள்ளமை புலனாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், தபால் ஊழியர்கள், அவர்களின் தொடர்பாளர்கள் உள்ளிட்டோரைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குருநாகல் மாவட்டத்தில் மருந்துகள் விநியோகிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனவும், அது தொடர்பில் வடமத்திய மாகாண செயலாளர், குருநாகல் மாவட்ட செயலாளர், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.