“மொட்டு’ அமைச்சரவையில் ஜனவரியில் அதிரடி மாற்றம் சரத் வீரசேகரவுக்கு சட்டம், ஒழுங்கு.
‘மொட்டு’ அமைச்சரவையில்
ஜனவரியில் அதிரடி மாற்றம் சரத் வீரசேகரவுக்கு சட்டம், ஒழுங்கு
அடுத்த வருடம் ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
20ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி அமைச்சரவைப் பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார்.
தற்போது இராஜாங்க அமைச்சராகவுள்ள சரத் வீரசேகர சட்டம், ஒழுங்கு விவகாரங்களுக்கான அமைச்சராகப் பதவி உயர்த்தப்படுவார். பொலிஸ் திணைக்களம், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் போன்றவை சட்டம், ஒழுங்கு அமைச்சின் கீழ் காணப்படும்.
பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்றப் பிரவேசம் எதிர்வரும் ஜனவரியில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள், ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது பஸில் ராஜபக்சவும் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளன.
இந்த வாரம் பஸில் ராஜபக்சவை சம்மதிக்க வைப்பதற்கான முயற்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் (பாதுகாப்பு) பதவியை இராஜிநாமா செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது பணிச்சுமையைக் குறைப்பதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனத்துறை அமைச்சராகப் பதவி வகிப்பார்.
இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சமல் ராஜபக்ச தனது இராஜிநாமாக் கடிதத்தைக் கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.