நினைவேந்தலை தடுத்துநிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக்காட்டாதீர். கோட்டாவுக்கு சஜித் எச்சரிக்கை.
நினைவேந்தல் உரிமையைத் தடுத்துநிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக்காட்டாதீர். கோட்டாவுக்கு சஜித் எச்சரிக்கை
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டின் மூவின மக்களுக்கும் ஜனாதிபதி என்றால் அனைவருக்கும் சமவுரிமையை வழங்கவேண்டும். தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுத்து நிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக் காட்ட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
‘கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது’ என ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்துரைக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“போரில் இறந்த தங்கள் உறவுகளைத் தமிழர்கள் அமைதியாக நினைவுகூர உரிமையுண்டு. அதை அரசு சட்டங்கள் கொண்டோ அல்லது மிரட்டல் விடுத்தோ தடுத்து நிறுத்த முடியாது.
கடந்த ஆட்சியில் நினைவேந்தல் உரிமையைத் தமிழர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம். ஆனால், இந்த ஆட்சியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு அதைத் தட்டிப் பறித்துள்ளது.
தமது உறவுகளை நினைவுகூரும் தமிழர்களுக்குப் புலி முத்திரை குத்தும் அரசின் மோசமான நடவடிக்கையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
நாம் இம்முறை ஆட்சிப்பீடம் ஏறியிருந்தால் நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியாகத் தொடர்ந்து நடத்தத் தமிழர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியிருப்போம்.
தமிழீழ விடுதலைப்புலிகளைத் தாமே அழித்தொழித்தோம் என வீரவசனம் பேசும் அரச தரப்பினர், நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழர்கள் தத்தமது இடங்களில் நடத்துவதால் ஏன் அஞ்சுகின்றனர்?
போரில் இறந்த தங்கள் உறவுகளைத் தமிழர்கள் நினைவுகூருவதால் தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் மீளெழுச்சி பெறமாட்டார்கள்.
எனவே, தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுத்து நிறுத்தி சர்வாதிகாரத்தின் உச்சநிலையைக் காட்ட வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமும் அவர் தலைமையிலான அரசிடமும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்