அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!!
‘பாதுகாப்பாக இருப்போம்’ எனப்படும் கொவிட் தடமறிதல் மென்பொருளை பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ICTA எனப்படும் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரினால், புதிய தொழிநுட்பமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டு மக்களின் நடமாட்டத்தை முகாமைத்துவப்படுத்தும் நோக்கில் இணையத்தள தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பாதுகாப்பாக இருப்போம்’ எனும் டிஜிட்டல் தீர்வொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய சாதாரண நிலைமையின் கீழ், கொரோனா தொற்றாளர்களின் நடமாட்டத்தை கண்காணித்தல் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோரை அடையாளப்படுத்துவதன் மூலம் தொற்று ஏற்படாதவர்கள் சுதந்திரமாக நடமாட தேவையான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த செயற்றிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களும் www.staysafe.gov.lk எனும் இணையத்தளத்துக்கு சென்று, தமது நிறுவனத்தை பதிவு செய்து தனித்துவமான QR குறியீட்டை தரவிறக்கம் செய்து கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் தரவிறக்கம் செய்யப்பட்ட குறித்த QR குறியீட்டை சகல அரச நிறுவனங்களும் தமது நிறுவனதுதுக்குள் உள்நுழையும் அனைத்து வழிகளிலும் தெளிவாக காட்சிப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தில் பணி புரியும் மற்றும் நிறுவனத்துக்கு வருகை தரும் எந்தவொரு திறன்பேசி பாவனையாளரும் குறித்த QR குறியீட்டை Scan செய்து உறுதி செய்த பின்னரே உள்நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் திறன்பேசி பாவனையாளர் அல்லாத ஏனையோருக்காக குறுஞ்செய்தி மூலமான உறுதிப்படுத்தல் நடைமுறையை பின்பற்றுவது அவசியம் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த நிறுவனத்தில் பணி புரியும் மற்றும் நிறுவனத்துக்கு வருகை தரும் அனைவரும் வெளியேறும் போதும் இதே நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நிறுவனத்துக்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் அனைவரும் பதிவு செய்யப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்துவது அந்தந்த நிறுவனங்களின் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி செயலகம் வலியுறுத்தியுள்ளது.