“ரஸ்ய ஊடுருவலின்” பெயரால் தொடரும் போலிச் செய்திகள் : சுவிசிலிருந்து சண் தவராஜா
உலகின் தொடர்பு மொழியாக விளங்கும் ஆங்கிலம் கால மாற்றத்திற்கு ஏற்ப புதுப்புதுச் சொற்களைத் தனது அகராதியில் ஆண்டுதோறும் இணைத்து வருகின்றமையை நாமறிவோம். அதுபோன்று, மனிதகுலத்தின் பாவனையில் புதிய சொற்கள் சேர்வதும், ஒருசில சொற்கள் வழக்கொழிந்து போவதும் நடந்தே வருகின்றன.
கணியன் பூங்குன்றன் பாடியதைப் போன்று “பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவில, கால வகையினானே” என்பது உண்மையே.
அமெரிக்க அரசுத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் 2016 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற கையோடு பிரபலமாகிய ஒரு சொற்றொடர் Fake News (போலிச் செய்தி). 2017 ஆம் ஆண்டில் கூகுள் தேடுபொறியில் அதிகம் தேடப்பட்ட இந்தச் சொற்றொடர் அதே ஆண்டில் கொலின்ஸ் நிறுவனத்தினால் அந்த ஆண்டிற்கான சொல்லாகப் பெயரிடப்பட்டது. ஆங்கில அகராதிகளை வெளியிடும் கொலின்ஸ் நிறுவனத்தின் தகவல்களின் படி, இந்தச் சொற்றொடரின் பாவனையில் அந்த வருடத்தில் 365 வீதம் அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. “செய்தி அளிக்கை என்ற பெயரில் பொய்யான, பெரும்பாலும் பரபரப்பான தகவல்களைப் பரப்புதல்” என அந்தச் சொற்றொடரை கொலின்ஸ் நிறுவனம் விளக்கியுள்ளது.
போலிச் செய்தி எத்தகையது என்பது அன்றாட வாழ்வில் நாம் அறிந்ததே. அதற்கு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை.
ரஸ்ய ஊடுருவல்
2016 ஆம் ஆண்டில் டொனால்ட் ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற ரஸ்யாவின் தலையீடே காரணம் என்ற ஆதாரமற்ற தகவலை வைத்துக் கொண்டு அமெரிக்க செய்தி ஊடகங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்த பரப்புரை காரணமாக எரிச்சலடைந்த நிலையிலேயே ட்ரம்ப், போலிச் செய்தி என்ற பெயரிட்டு ஊடகங்களைச் சாடத் தொடங்கியிருந்தார்.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, அது உண்மை போன்றதொரு வடிவத்தை எடுத்துவிடும் என்ற கொயபல்ஸ் பாணித் தந்திரம் காரணமாக, அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தல் வரை இந்த ‘ரஸ்ய ஊடுருவல்” என்கின்ற விடயம் பேசப்பட்டதை நாம் அவதானித்துள்ளோம்.
ஒரு கட்டத்தில், ட்ரம்ப் அவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்களே இந்த விவகாரத்தில் சிரத்தை காட்டத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடாத்திய பின்னரும் ரஸ்யத் தலையீடு பற்றி எதுவும் கண்டறியப்படாத போதிலும், ரஸ்யத் தலையீடு தொடர்பான அச்சம்(?) இன்னமும் அமெரிக்காவில் பேசுபொருளாகவே இருந்து வருகின்றது.
அமெரிக்கக் கண்டுபிடிப்புகள் எவ்வாறு உலகச் சந்தையில் அறிமுகமாகி செல்வாக்கைப் பெற்று விடுகின்றனவோ அதைப் போலவே, புதிய கண்டுபிடிப்பான “ரஸ்யத் தலையீடு அல்லது ரஸ்ய ஊடுருவல்” என்பதுவும் வெகுவிரைவில் ஐரோப்பாவில் பிரபல்யம் பெறத் தொடங்கியது. 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரித்தானியாவில் நடைபெற்ற தேர்தல்களில் ரஸ்யத் தலையீடு தொடர்பான செய்திகள் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டன. இதே போன்று யேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தேர்தல்களிலும் ரஸ்ய ஊடுருவல் தொடர்பான அச்சம் ஊடகங்களை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது ஐரோப்பிய நாடுகள் எதுவானாலும் அங்கே நடக்கும் தேர்தல்களில் – அது உள்ளூராட்சித் தேர்தலாக இருந்தாலும் கூட – ரஸ்யத் தலையீடு இருப்பதாக ஒரு சிறிய செய்தியாவது வெளிவந்த வண்ணமேயே உள்ளதைக் காணலாம்.
தேவை ஒரு எதிரி
அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற விடயங்கள் தேவைப்படுகின்றன. உலகெங்கும் வலதுசாரிகளின் எழுச்சி அவதானிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் “எதிரி” எனக் காட்சிப்படுத்த ஒரு நாடோ அன்றி ஒரு முகாமோ அவசியமாகின்றது. பனிப்போர் காலகட்டத்தில் அமெரிக்க தலைமையிலான ஒரு வலதுசாரி முகாமும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையில் ஒரு இடதுசாரி முகாமும் இருந்து வந்தன. இதனால், எதிர்முகாமைக் கண்காணித்தல் என்ற அடிப்படையில் ஆயுத போட்டாபோட்டி இடம்பெற்று வந்தது. அதன் விளைவாக ஆயுத உற்பத்தியாளர்களும் அதனோடு இணைந்த வர்த்தகத் துறையினரும்; பெரும் பொருளீட்ட முடிந்தது. 90 களில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவின் பின்னான சூழலில் எதிர்முகாம் இல்லாத காலகட்டம் உருவானது. இதனால் தமது வர்த்தகம் பாதிக்கப்படுவதை உணர்ந்த ஆயுத உற்பத்தியாளர்களும் அவர்களின் அடிவருடிகளும் பலமான எதிரியொன்றைக் கட்டமைக்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொண்டனர்.
புட்டின் தலைமையிலான ரஸ்யாவின் எழுச்சியும், மக்கள் சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் இந்த வாய்ப்பை அவர்களுக்கு வழங்கியது. அந்த வாய்ப்பின் ஒரு அம்சமே ரஸ்ய ஊடுருவல் என்னும் பூச்சாண்டி.
ஸ்பெயினில் புதிய சட்டம்
தாமே இட்டுக்கட்டிய விடயத்தைத் தாமே நம்புவதைப் போன்று, இந்த நிரூபிக்கப்படாத “ரஸ்ய ஊடுருவலை”ச் சாட்டாக வைத்துக்கொண்டு அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகம் செய்வதில் ஐரோப்பிய அரசாங்கங்கள் முனைப்புக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாகப் பரப்புரை செய்துவரும் இத்தகைய அரசாங்கங்கள் சொந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடைமுறைகளை அறிமுகஞ் செய்து வருகின்றன. அத்தகைய ஓரு சட்டத்தை அண்மையில் ஸ்பெயின் நாடு – கொரோனாக் கொள்ளை நோயினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் – அறிமுகம் செய்துள்ளது.
“என்ன? ஐரோப்பாவில் கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடா? இருக்கவே இருக்காது” என ஆச்சரியத்தோடு கேட்பவராக நீங்கள் இருந்தால் “வெள்ளைக்காரன் பொய்சொல்ல மாட்டான்” என்று நம்பக்கூடிய ஒருவர் என்று புரிந்து கொள்ளலாம். மாறாக, ‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்” என யதார்த்தமாகச் சிந்திப்பவராக இருந்தால் இணையத் தளங்களில் தேடி உண்மையை அறிந்து கொள்ளலாம்.
Procedure for Intervention against Disinformation (தவறான தகவல்களுக்கு எதிரான தலையீட்டு நடைமுறை) என்ற பெயரிலான இந்தச் சட்டம் நவம்பர் 5 இல் ஸ்பெயின் நாட்டில் நடைமுறைக்கு வந்தது. புதிய சட்டத்தின் கீழ் “போலிச் செய்தி” அல்லது “வெளிநாட்டுத் தலையீடு” என்பவை தொடர்பாக இணையத்தில் கண்காணிப்புச் செய்யும் அதிகாரத்தை அரசாங்கம் பெறுகின்றது. பெரும்பாலும் சமூக ஊடகங்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவுள்ள அரசாங்கம் அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகளுக்கு எதிரான பரப்புரையை மேற்கொள்ளும் அதேவேளை “வெளிநாட்டுத் தலையீடு” கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என விளக்கம் தரப்பட்டுள்ளது.
எது போலிச் செய்தி?
ஒரு தகவலை “போலிச் செய்தி” என வரையறுப்பதற்குரிய அளவீடுகள் என்ன என்பது தொடர்பாக புதிய சட்டத்தில் விளக்கம் எதுவும் தரப்படாத நிலையில், தனக்கு வேண்டப்படாத நபர்களைப் பழிவாங்க இந்தச் சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. “கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான இந்தச் சட்டம் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு வாய்ப்பை வழங்கும்” எனத் தெரிவித்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு இது தொடர்பில் அறிக்கையொன்றையும் விடுத்துள்ளது. “போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துதல் என்ற பதப் பிரயோகத்தோடு உலகின் பல நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சட்டங்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். உண்மையில் இத்தகைய சட்டங்களின் நோக்கம் ஊடக சுதந்திரத்தை இல்லதொழிப்பதே. எனவே ஸ்பெயின் அரசாங்கம் புதிய சட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் ஸ்பெயின் நாட்டுத் தலைவர் அல்போன்ஸோ ஆர்மடா.
“இத்தகைய சட்டம் ஒன்றை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக ஊடக அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்கள் அறியப் பட்டிருக்க வேண்டும். அத்தோடு தவறான தகவல்கள் என்ற பதத்திற்குத் தெளிவான வரையறைகள் வகுக்குப்பட வேண்டும்” என்கிறார் அவர்.
இந்தச் சட்டத்தை அறிமுகம் செய்வதற்கு ஸ்பெயின் அரசாங்கம் முன்வைத்துள்ள காரணம் “பொதுமக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அந்நிய சக்திகள் போலிப் புரப்புரைகளில் ஈடுபடுவதால், அதனை எதிர்கொள்ள குறித்த சட்டம் தேவை” என்பதாகும். ‘அந்நிய சக்திகள்” எவை என வெளிப்படையாகச் சொல்லப்படாது விட்டாலும் அரசாங்கம் மறைமுகமாகச் சொல்ல வருவது “ரஸ்யத் தலையீடு” பற்றியே என்கிறார்கள் நோக்கர்கள். ஸ்பெயின் நாட்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு ரஸ்யாவே காரணம் எனக் குற்றம்சாட்டும் ஆட்சியாளர்கள், 2017 இல் நடைபெற்ற கற்றலோனியா சுதந்திரம் தொடர்பான வாக்கெடுப்பில் ரஸ்யத் தலையீடு இருந்தது என்கின்றனர்.
அதேவேளை, “கற்றலோனியா பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை ரஸ்யா கொண்டிருந்தது என்றும் அதற்காக பத்தாயிரம் வரையான படையினரை கற்றலோனியாவின் முன்னைநாள் தலைமை அமைச்சரும் தற்போது பெல்ஜியம் நாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளவருமான கார்லஸ் பியுக்டெமோன்ற் அவர்களுக்கு ஆதரவாக அனுப்பிவைக்க இருந்தது” எனவும் ஸ்பானிய துணை இராணுவம் ஒரு பரபரப்புத் தகவலைக் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சமூக ஊடகங்களின் உலகத்தில் போலிச் செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை என்பதை வாசகர்கள் ஒவ்வொருவரும் அனுபவத்தில் – ஒன்றுக்குப் பல தடவை – உணர்ந்து கொண்டிருப்பீர்கள். போலிச் செய்திகளை நாம் பார்க்கிறோம் என்றால் அதனைப் பரப்பிக் கொண்டிருப்பவர்களின் உளவியல் என்ன என்பது பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. வாழும் காலத்திலேயே வரலாற்றை மாற்றி எழுதும் வல்லமையை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். “பொய்மையும் வாய்மையுடைத்து..” என வள்ளுவர் கூறியதைப் போன்று இத்தகைய போலிச் செய்திகளால் ஒருசில நன்மைகள் அவ்வப்போது விளைந்திருந்தாலும் கூட, பொதுவில் போலிச் செய்திகள் நச்சுடல் கொண்டவையே.
Infodemic
கொரோனாக் கொள்ளை நோய்க் காலத்தில் நோயில் இருந்து உலக மாந்தரைக் காக்கப் போராடிய உலக சுகாதார நிறுவனம், போலிச் செய்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது. சீனாவின் வூகான் நகரில் சிறிய எண்ணிக்கையில் ஆரம்பித்த கொரோனக் கொள்ளை நோய் எவ்வாறு வெகு வேகமாக உலகம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தியதோ அதேபோன்று கொரோனா தொடர்பான போலிச் செய்திகளும் சிறிது சிறிதாக ஆரம்பித்து இன்று பாரிய அளவில் வளர்ந்து நிற்கின்றது. விபரம் தெரிந்தவர்களுக்குக் கூட உண்மைச் செய்தி எது, போலி எது என்பதில் மயக்கம் ஏற்படும் அளவிற்கு இன்று போலிச் செய்திகள் பரவிக் கிடக்கின்றன. கட்டுக் கடங்காமல் பரவிய கொரோனாவை எவ்வாறு உலக சுகாதார நிறுவனம் Pandemic (கொள்ளை நோய்) எனப் பிரகடனம் செய்ததோ அதேபோன்று கட்டுக்கடங்காமல் பரவிவரும் போலிச் செய்திகளையும் Infodemic எனப் பிரகடனம் செய்துள்ளது. Pandemic எவ்வாறு ஆங்கில அகராதியில் இடம்பிடித்துக் கொண்டதோ அதைப் போன்று Infodemic உம் வெகுவிரைவில் ஆங்கில அகராதியில் இடம்பிடித்துக் கொள்வதுடன் கொலின்ஸ் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான சொல்லாகவும் மாறக் கூடும்.
கொரோனாக் கொள்ளைநோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலகின் பல பாகங்களிலும் இருந்து அறிவிப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலும் அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் கொரோனாக் கொள்ளைநோயை மனித இனம் வெற்றி கொண்டிருக்கக் கூடும். Pandemic ஒழிந்தாலும் காலவரையறையின்றித் தொடரப் போவது என்னவோ Infodemic என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.