நாமே கொல்கிறோம் சூழலை! : – சிக்மலிங்கம் றெஜினோல்ட்
சுற்றுச் சூழலைப்பற்றி பேசுவது இப்பொழுது பலருக்கும் ஒரு ‘பஷன்’ என்றாகி விட்டதா?. ஏன் இப்படிக் கடுமையான சொற்களில் இதைக் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், இதற்கென்றே பல இடங்களிலும் அமைப்புகளும் உண்டு. ஆட்களும் உண்டு.
ஊடகங்களிலும் சூழல் பாதுகாப்பு, சுற்றாடல் தூய்மை பற்றியெல்லாம் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்குச் சீராக உள்ளது? அதாவது, சூழலை, சுற்றயலை எந்தளவுக்குச் சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கிறோம்? இதனோடு சம்மந்தப்பட்டவர்கள் உரியமுறையில் செயற்படுகிறார்களா? இதற்குப் பொறுப்பான நிறுவனங்களின் அக்கறைகள் என்ன? அவற்றின் செயற்பாடுகள் எப்படி உள்ளன? இதில் மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பு, பொறுப்புணர்வு போன்றன எவ்வாறுள்ளது? என்று பார்த்தால் இதைப்பற்றிக் கடுமையான தொனியிலேயே பேச வேண்டியிருக்கும்.
நம்முடைய கண்களைச் சுழற்றி நாலு பக்கமும் கொஞ்சம் ஊன்றிக் கவனியுங்கள். எவ்வளவு பாரதூரமாக சூழல் கெட்டுக் கிடக்கிறது என்று தெரியும். அதிகமேன், உங்களுடைய வீட்டுக்கு அண்மையிலிருக்கும் கடைகளுக்கு அக்கம் பக்கமாகக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். அந்தக் கடைகளின் இரண்டு பக்கங்களிலும் நிச்சயமாக ஒரு குப்பை மேடாவது இருக்கும்.
சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் இதை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். எந்தக் கூச்சமும் இல்லாமல் தங்கள் கடைகளின் கழிவுகள், குப்பைகளை எல்லாம் பக்கத்திலேயே போட்டு விடுகிறார்கள் நம்முடைய வணிகப் பெருமக்கள். தெருக்கரை, பலரும் புழங்கும் பொது இடம் என்றெல்லாம் அவர்கள் கருதுவதல்லை. இதில் அவரகளுக்கு எந்தப் பொறுப்புணர்வும் கிடையாது. கவாரத்துக்கு ஒரு தடவையோ இரண்டு தடவை எரிக்கப்படும். மழைக்காலம் என்றால் அதுவும் இல்லை.
இந்தக் குப்பையை நாய்கள், மாடுகள் எல்லாம் மேயும். காகமும் குருவிகளும் கொத்திக் கிளறுமம். நாய்கள் கழிவுகளை இழுத்து அங்குமிங்கும் சிதறும். கஞ்சல் காற்றில் பறக்கும். மழையென்றால் குப்பையைக் கழுவிய தண்ணீர் எல்லா இடமும் பரவியோடும். இதைப்பற்றி யாருக்குக் கவலை? இதெல்லாம் உங்களுக்கு சிரமமாக இருந்தால், உங்களுக்கான கடையை மாற்றலாம். அப்படி மாற்றினாலும் அடுத்த கடையிலும் இதுதானே நிலைமை?
அப்படியென்றால் இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்கிறீர்களா? அதிகமாக ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு கடைக்காரரும் கழிவுகளைப் போடுவதற்கான கொள்கலனை வைத்திருக்க வேண்டும் என பிரதேச சபை அல்லது நகரசபை உத்தரவிட்டால் போதும். எல்லோரும் அதை வைத்திருப்பர். அதில் குப்பைகளும் கழிவுகளும் சேரும். பின்னர் நகரசபை அல்லது பிரதேச சபையின் கழிவகற்றும் வண்டி வந்து இதையெல்லாம் எடுத்துக் கொண்டு போகக் கூடியதாக இருக்கும். வேண்டுமானால் இதற்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் கூட அறவிட்டுக் கொள்ளலாம். அல்லது கடைக்காரரே கழிவகற்றும் சாத்தியமான பொறிமுறையை தமக்கேற்றவாறு உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படிச் செய்தால் தெருவெங்கும் ஊரெங்கும் குப்பையாக இருக்காது. ஊரும் தெருவும் அழகாகவும் நல்ல சுவாத்தியமாகவும் இருக்கும். வர்த்தகர் சங்கங்களுக்கும் இதில் பொறுப்புண்டு.
ஆனால், இந்த எளிய விசயம் கவனிக்கப்படவே படாது. இதைப்பற்றி யாருக்குத்தான் அக்கறை?.
மறுவளமாக சூழலைப் பற்றி ஏராளமாகப் பேசுவார்கள்.
இதைப்போலவே நம்முடைய கடற்கரைகளும் உள்ளன. குறிப்பாக குருநகர், நாவாந்துறை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, பண்ணை, மாதகல், கீரிமலை போன்ற இடங்களிலுள்ள கடற்கரைகள் கெட்டே விட்டன. மன்னிக்கவும், கெடுக்கப்பட்டு விட்டன. பிளாஸ்ரிக் கழிவுகள் தொடக்கம் சொப்பிங் பை வரையில் கலர் கலராக கழிவுகள். அத்தனையும் கடலுக்கும் கடல்வாழ் உயிரிகளுக்கும் ஆபத்தானவை.
இது தீங்கானது என்று யாருக்குமே தெரியாதா? தெரியும். எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.தெரிந்தாலும் யாருக்கும் இதொன்றும் உறுத்தலாகப் படாது. அப்படிப் பட்டால்தானே அதைப்பற்றிச் சிந்திக்கத் தூண்டும். கழிவை அகற்ற வேண்டும் என்ற உணர்வு வரும். மேலும் கழிவுகளை அங்கே போடாமல் விடக் கூடியதாகவும் இருக்கும். அதோடு அந்தப் பகுதிகளை அழகாக்கி அவற்றை ரசிக்கக் கூடிய அளவுக்குச் சுத்தமாக வைத்திருக்கவும் முடியும்.
ஆனால் இப்படி எந்த அக்கறையும் நமக்கு வராது. பதிலாக எதையும் காணாததைப் போலக் கடந்து சென்று விடுவோம். எவ்வளவு பெருங்குணம் இது என்று பார்த்தீர்களா? இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமெதுவும் கிடையாது. அதிகாரிகள், சாதாரண உழைப்பாளர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. எல்லோரும் சமத்துவச் சிந்தனையாளர்களல்லவா!
இப்பொழுது மாரி மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் டெங்கு அபாயம் என்று எச்சரிக்கை நோட்டீஸ்களும் அபாய அறிவிப்புகளும் வரப்போகின்றன. பொது இடங்களிலேயே குப்பையைக் கண்டபடி போட்டு விட்டுச் சூழல் சுத்தம் பற்றியும் சூழற் சுகாதாரத்தைப் பற்றியும் பேசுவதால் பயன் என்ன?
முதலில் பொது இடங்களில் பகிரங்கமாகவே குப்பை கொட்டுவதையும் கழிவுகளைத் தள்ளுவதையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகர்கள், அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் எனப் பலர் உள்ளனர். இவர்கள் இதில் கூடிய கவனத்தோடு செயற்படுவது அவசியம். வேண்டுமானால் சொல்வழி கேட்காதவர்களுக்குத் தண்டத்தையே அறிவிடலாம்.
சட்டம், தண்டனை, தண்டப் பண அறவீடு போன்ற கடுமையான நடவடிக்கைகளால் இதைக் கட்டுப்படுத்தவே முடியாது. வேண்டுமானால் ஒரு தற்காலிக ஏற்பாடாக இதிருக்குமே தவிர, ஒரு தொடர் செயற்படாக, சமூகப் பழக்கமாக இது வராது என்று சிலர் கூறுகின்றனர். இதற்குப் பொருத்தமானது விழிப்புணர்வே என்பது இவர்களுடைய வாதம்.
சிலவற்றுக்குத் தண்டம், தண்டனை, சட்டம் போன்றன அவசியமே. அதைப் பிரயோகப்படுத்தும் முறைமையை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். பதிலாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பதெல்லாம் அந்தளவுக்கு அவசியமற்றவை. பொது இடத்தில் கழிவுகளைப் போடுவது நோயைப் பெருக்கும். சூழலை நாசப்படுத்தும். இயற்கைச் சூழலைக் கெடுத்து விடும். நாற்றத்தை உண்டாக்கும் என்ற அடிப்படை அறிவே இல்லாததா நம்முடைய சமூகம்?
இங்கே தேவையானது விழிப்புணர்வு அல்ல. பொறுப்புணர்வே. இது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் வர வேண்டும். அனைத்து விடயங்களிலும் வர வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு ஊரிலும் சூழலைக் கெடுக்கிற மாதிரி ஏராளம் விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பனையைத் தறிக்கிறார்கள். மரங்களை வெட்டுகிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள். மணல் ஏற்றுகிறார்கள். ஆறுகளைக் கண்டபாட்டுக்குத் தோண்டுகிறார்கள். கசிப்புக் காய்ச்சுகிறார்கள். வீடுகளில் வைத்துச் சாராயம் விற்கிறார்கள். கஞ்சா வணிகம் செய்கிறார்கள். இப்படியே மாபியாக் கலாச்சாரம் ஒன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் பகிரங்கமாகவே நடக்கிறது. அல்லது இதை யார் செய்கிறார்கள் என்று பகிரங்கமாகவே தெரியும்.
ஆனாலும் இவற்றுக்கு எதிராக யாரும் குரல் கொடுப்பதுமில்லை. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிப்பதுமில்லை. சில இடங்களில் ஒன்றிரண்டு பேரோ ஒரு சில அமைப்புகளோ எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம். அதுவும் ஒரு கொஞ்சக் காலம்தான். பின்னர் அவர்கள் களைப்படைந்து விடுவார்கள்.
இவ்வளவுக்கும் இன்று ஒவ்வொரு ஊரிலும் படித்தவர்கள், பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள், ஆசிரியர்கள், பல துறைகளிலுமான உத்தியோகத்தர்கள் என்று பலர் உள்ளனர். பிரதேச சபை உறுப்பினர், நகரசபை, மாநகர சபை உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர் என்று மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் அமைப்புகள், கமக்காரர் அமைப்புகள் என ஏராளமுண்டு. போதாக்குறைக்கு ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் என மூன்று நிரந்தர உத்தியோகத்தர்கள் வேறுண்டு. கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என.
இத்தனை பேரும் இவ்வளவு அமைப்புகளும் இருக்கத்தானே சூழலைக் கெடுக்கும் காரியங்கள் நடக்கின்றன?
அப்படியென்றால் இதற்கு என்ன பொருள்? நம்முடைய பொறுப்புணர்வின் லட்சணம் அந்தளவுக்குத் தாழ்ந்து விட்டது என்பதுதானே! இதில் வெட்கப்பட வேண்டிய விசயம் ஒன்றுண்டு. அரசியல் தரப்பினரும் அரச உத்தியோகத்தர்களும் உயர் அதிகாரிகளும் கூட சூழலைச் சிதைக்கின்ற, இயற்கை வளங்களைக் கொள்ளையிடுகின்ற காரியங்களைப் பார்க்கிறார்கள். சட்டத்தைப் பாதுகாக்கும் தரப்பினர் கூட இந்த முறைகேடுகளில் பங்கு வைத்துச் செயற்படுகிறார்கள். பலருடைய டிப்பர்களும் ட்ரக்ரர்களும் இதற்காக ஓடுகின்றன என்பதை இங்கே கூறித்தான் தெரிய வேண்டுமென்றில்லை.
இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும் சூழலில்தான் நாம் சுற்றுச் சூழலைப்பற்றி, அதனுடைய பாதுகாப்பைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். இதன் பொருள் என்ன?
தேசம் ஒன்றைப் பற்றி ஆண்டுக்கணக்காகப் பேசிக் கொண்டும் கனவு கண்டுகொண்டும் இருப்பவர்கள் நாம். அந்தத் தேசம் எப்படி இருக்க வேண்டும்? அதை எப்படி பாதுகாப்பது? அதன் வளங்களை எப்படிக் காத்துக் கொள்வது? அதற்கான செயற்திட்டங்கள் என்ன? இதில் நம்முடைய பொறுப்பும் பொறுப்புணர்வும் எத்தகையதாக இருக்க வேண்டும்?
தயவு செய்து இதைப்பற்றி யாராவது சொல்லுங்கள்.
சிக்மலிங்கம் றெஜினோல்ட்