இலங்கையில் மேலும் 3 கொரோனா சாவு! இதுவரை 90 பேர் உயிரிழப்பு.
இலங்கையில் மேலும் 3 கொரோனா சாவு! இதுவரை 90 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்கனவே 87 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள 3 மரணங்களுடன், இதுவரை 90 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஒரு ஆணும் 2 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு மரணமடைந்தவர்கள் கம்பஹா – ஹெய்யந்துடுவ, கொழும்பு 15, கொழும்பு 14 பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
88ஆவது மரணம்
கம்பஹா மாவட்டம், ஹெய்யந்துடுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 86 வயதான பெண் ஒருவர், கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட உக்கிர நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
89ஆவது மரணம்
கொழும்பு 15, மட்டக்குளிப் பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதான ஆண் ஒருவர், கொரோனாத் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அவ்வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம், கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட குருதி விசமடைந்தமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
90ஆவது மரணம்
கொழும்பு 14, கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதான பெண் ஒருவர், மாரடைப்புக் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணத்துக்கான காரணம், மாரடைப்பு மற்றும் கொரோனாத் தொற்று நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.