போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு தயங்குவது ஏன்?
போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு தயங்குவது ஏன்?
நாடாளுமன்றில் ராஜபக்ச அரசிடம் கஜேந்திரகுமார் எம்.பி. கேள்விக்கணை
இலங்கையின் இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றால், அரசு சர்வதேச விசாரணையை அனுமதிக்கத் தயங்குவது ஏன்? என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்குப் பதிலளிக்கும்போதே, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
சர்வதேச பணத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும், போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக பொய்யான கருத்துக்களை அவர்கள் வெளியிட்டு வருகின்றனர் எனவும் இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன்போது, ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “நீங்கள் போர்க்குற்றம் செய்யவில்லை என்றால், உங்கள் நிலைப்பாட்டை உறுதியாக நியாயப்படுத்த முடியும் என்றால், அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளன என்றால் நீங்கள் சர்வதேச விசாரணையை அனுமதிக்கத் தயங்குவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், “நீங்கள் எங்களுடன் வாதாடுவதைத் தவிர்த்து, உங்களின் நியாயத்தை விசாரணைகளின் மூலமாக நிரூபித்துக்காட்டுங்கள்” எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதிப் போரின்போது, தான் நாட்டில் இருந்தார் எனவும், அப்பாவி மக்களைக் கொலைசெய்ய வேண்டாம் என அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் வலியுறுத்தினார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் மேலும் கூறினார்.