சிங்கள தாய்மாருக்கு உள்ள உரிமை , தமிழ் தாய்மாருக்கும் வேண்டும் : மனோ கணேசன்
“சிங்கள தாய்மார், உயிழந்த தம் பிள்ளைகளுக்கு இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். அந்த பிள்ளைகள் யார்?
1971, 1989 களில், ஸ்ரீலங்கா இராணுவத்தையும், போலீசையும் சுட்டுக்கொன்ற, இந்த பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசி, புனித தலதா மாளிகைக்கையையும் தாக்கிய ஜேவிபி போராளிகள் ஆவர்.
அவர்கள் போராளிகள், புலிகள் பயங்கவாதிகளா? இதை நான் ஏற்க மாட்டேன். இரு சாராரையும் ஒன்றாக கணியுங்கள். சிங்கள தாய்மார்களுக்கு உள்ள அஞ்சலி உரிமையை தமிழ் தாய்மார்களுக்கும் வழங்குங்கள். போராளிகள் நினைவு கூருவதால் அவர்களது ஆயுத கொள்கையை ஏற்கிறோம் என அர்த்தப்படாது. ஆனால் அவர்களது உயிர் இழப்புகளை நினைவு கூரும் உலகளாவிய உரிமையை மதிப்போம்.” என முன்னாள் அமைச்சரும் , ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், சனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நாடாளுமன்றத்தில் தனது கருத்துகளை முன்வைத்து பேசினார்.
உயிரிழந்தோரது நினைவேந்தல் பற்றி இன்று சபையில் சிங்களத்தில் விளக்கி வலியுறுத்தி மனோ கணேசன் பேசிய போது வழமையாக “கூச்சல்” எழுப்பும் ஆளும் கட்சியினர், அமைச்சர் சரத் வீரசேகர உட்பட அனைவரும், அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர். எதிரணியில் இந்த விஷயம் பற்றி பதட்டமடையும், சரத் பொன்சேகா சபையில் இன்று இருக்கவில்லை.
அதேநேரம் தொடர்ந்து பேசிய அவர் , தோட்ட காணிகளை, சில இடங்களில் “கொண்ட்ராக்ட்” அடிப்படையில் தொழிலாளருக்கு வழங்கி, சில கம்பனிகள் உழைப்பு சுரண்டல் செய்கின்றன. இதை மாற்றி, தோட்ட காணிகளை, அரசாங்கமே பிரித்து, அனுபவமிக்க, தோட்டத்தொழிலாள குடும்பங்களுக்கு குத்தகைக்கு வழங்கி, அவர்களை சிறு தோட்ட உடைமை கிராமவாசிகளாக மாற்றி, சந்தா அரசியலை முடிவு கட்டி, உழைக்கும் மக்களையும், தோட்டத்தொழில் துறையையும் வளர்த்தெடுக்க வேண்டும். இந்நோக்குகளில், கடந்த கால பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்கவைவிட, கனவான் அமைச்சராக இன்றைய அமைச்சர் ரமேஷ் பதிரண செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.