டி20 போட்டியில் மேற்கிந்தியதீவு அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி.

நியூசிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஒக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 3.1 ஓவர்களில் 58 ரன்களை விளாசி பிரமிக்க வைத்தது.
ஆனால் அடுத்த ஒரு ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. அதன் பிறகு அணித்தலைவர் கீரன் பொல்லார்ட் சிக்சர் மழை பொழிந்து அணியை காப்பாற்றினார். இடையில் 3 முறை மழையால் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 180 ஓட்டங்களை குவித்தது. 20 ஓவர் போட்டியில் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த பொல்லார்ட் 75 ரன்களுடன் (37 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். தொடக்க வீரர் ஆ.பிளட்செர் 34 ரன்கள் (14 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஆனால் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் 16 வைட் உள்பட 26 ரன்களை எக்ஸ்டிரா வகையில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

பின்னர் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி நியூசிலாந்து அணி 16 ஓவர்களில் 176 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணி 63 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கான்வே (41 ரன்), ஜேம்ஸ் நீஷம் (5 பவுண்டரி, 3 சிக்சருடன் 48 ரன், நாட்-அவுட்), மிட்செல் சான்ட்னெர் (31 ரன், நாட்-அவுட்) ஆகியோர் சிறப்பாக விளையாடி இலக்கை எட்ட வைத்தனர். நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டி கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.