வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள்.
வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்.
யாழ்ப்பாண குடாநாட்டில் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துதெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
காரைநகர் பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இன்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
காரைநகரில் தொற்றுக்குள்ளா னவருடன் தொடர்புடைய 36 குடும்பங்களுக்கு மேல் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ் நகரப்பகுதி உட்படசில வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்தவர், தான் கொழும்பிலிருந்து வருகை தந்ததை மறைத்து 3 நாள்களுக்கு மேல் பல இடங்களில் நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
“காரைநகர் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் கொரோனா தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு சுய தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
அத்துடன் வேலணை பகுதியில் வீதி திருத்த பணிக்காக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவரோடு தொடர்புடையவர்கள் தொடர்பிலும் சுகாதாரப் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
எனினும் பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையை புரிந்துகொண்டு குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினர்களுக்கு தகவலினை வழங்கி கொரோனா தொற்று குடாநாட்டில் மேலும் பரவாமல் இருப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்ததோடு குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் குடாநாட்டுக்குள் வருவோரும் இங்கு வந்தவுடன் தமது பதிவுகளை சுகாதார பிரிவினரிடம் மேற்கொண்டு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படவேண்டும் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.