மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பிரதமருடன் சந்திப்பு

மாலைத்தீவு பாதுகாப்பு அஹமட் டிடி உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (27) இடம்பெற்றது.
இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நாட்டிற்கு விஜயம் செய்த மாலைதீவின் பாதுகாப்பு பிரதானிகள் பிரதமரை சந்தித்து பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடினர்.
போதைப்பொருள், பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட சட்டவிரோத வர்த்தகத்தை இல்லாதொழித்தல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் அஹமட் டிடி, பிரதி பாதுகாப்பு படைத் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் மதின், இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக், பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் இஸ்மாயில் நசீர், இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.