கொரோனாவால் இறப்போரை அடக்கம் செய்ய விடாது தடுப்பது முட்டாள்தனமானது : அலி சப்ரி
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் மக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காதது முட்டாள்தனமானது என நீதி அமைச்சர் அலி சப்ரி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள நிலத்தடி நீர் மட்டம் உள்ள நாடுகள் உட்பட 194 நாடுகள் கொரோனாவால் இறப்பவர்களது உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்துள்ளன என்று அமைச்சர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ICRC) இதை அங்கீகரித்து, ஐக்கிய நாடுகள் சபை இக் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கோவிட் 19 ல் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதிக்காததற்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து மீண்டும் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
மாளிகாவத்தையில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு முஸ்லிமின் உறவினர்கள் சவப்பெட்டியையோ அல்லது தகனத்திற்கான பணத்தையோ கொடுக்க முடியாமையால் , அவ் உடலை ஏற்றுக்கொள்ளாமல் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பியுள்ளனர்.
கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இருப்பினும், கொரோனா வைரஸால் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்யுமாறு பல கோரிக்கைகள் வந்தாலும், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் தகனம் குறித்த சர்ச்சையின் பின்னர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.