காரைநகர் மற்றும் வலி.மேற்கில் பாடசாலைகள் நாளை இயங்கும் சுகாதார பிரிவு தகவல்.
காரைநகர் மற்றும் வலி.மேற்கில்
பாடசாலைகள் நாளை இயங்கும்
சுகாதார பிரிவு தகவல்.
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இக்காரணத்திற்காக பாடசாலைகள் எவையும் மூடப்படாது என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. காரைநகர் மற்றும் வலி. மேற்கில் உள்ள பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை வழமைபோன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து மாணவர்கள் வருகைதந்தால் அவர்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்புவதற்கு அதிபர், ஆசிரியர்கள் உரிய பொறுப்புணர்வுடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைநகர் நபருடன் நெருங்கி பழகியவர்கள், அவர் சென்றுவந்த இடங்கள் என்ற அடிப்படையில் நூற்றுக்கணக்கானோர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணியாளர்கள் 31 பேர் வரையானோர் குடும்பங்களுடன் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று, காரைநகரில் 21 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சங்கானையிலும் பல குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காரைநகர் மற்றும் பொன்னாலை, மூளாய், சுழிபுரம், சங்கானை பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறுமா என பெற்றோர்களும் மாணவர்களும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இது தொடர்பாக சுகாதாரப் பிரிவிடம் கேட்டபோது, பாடசாலைகளை மூடுவது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நாளை (30) திங்கட்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அதில் அதிகமானோருக்கு தொற்று இனங்காணப்பட்டால் மாத்திரமே காரைநகரை முடக்குவது குறித்து ஆராயப்படும் எனவும் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.