திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.
சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கருதபடுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அக்கோயில் பின்புறம் உள்ள மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தை லட்சகணக்கானோர் நேரடியாக தரிசனம் செய்வது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10ம் நாளான இன்று அதிகாலை திருக்கோயிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
ஏகன் அனேகன் எனும் தத்துவத்தை விளக்கும் வகையில் சிவாச்சாரியார்கள் ஒரு மடக்கில் இருந்து 5 மடக்கிற்கு தீபத்தை ஏற்றி திருக்கோயிலின் 2ம் பிரகாரத்தை சுற்றி வந்து வைகுந்த வாயில் முன்பு அண்ணாமலையார் மலைக்கு பரணி தீபத்தை காண்பித்தனர். பின்னர் உண்ணாமலை அம்மனுக்கும், விநாயகர் முருகனுக்கும் தீப தரிசனம் காண்பித்து கோவில் கருவறைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் 2ம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து பஞ்ச மூர்த்தி சுவாமிகளும் ஒன்றன் பின் ஒன்றாக பக்தர்கள் தோளில் சுமந்தபடி தாண்டவம் ஆடிக்கொண்டு தங்க கொடிமரம் எதிரே உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர்.
இதையடுத்து அர்த்தநாரீஸ்வரர் கோரத் தாண்டவம் ஆடியபடி தங்க கொடிமரம் அருகே வந்து சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தந்தார்.இதன்பின்னர் மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள 6 அடி உயர மகா தீப கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
இதேபோல் தங்க கொடி மரம் அருகே அமைக்கப்பட்டுள்ள செம்பு பாத்திரத்தில் நெய் ஊற்றப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபத்துக்கு 3,500 கிலோ ஆவின் நெய்யும், ஆயிரம் மீட்டர் காடா துணியால் செய்யப்பட்ட திரியும் பயன்படுத்தபடுகிறது. மகா தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் இன்று முதல் 11 நாட்களுக்கு தீப ஒளியாக பக்தர்களுக்கு சுவாமி காட்சி அளிப்பார் என நம்பப்படுகிறது.
ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படுவதை காணவும், கிரிவலம் செல்லவும் பல லட்சம் பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலும் திருவண்ணாமலை வருவது வழக்கமாகும். இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் கோயிலுக்கு வரவும், கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவண்ணாமலையில் பக்தர்கள் வீடுகளிலேயே தீபத்தை ஏற்றி மகா தீபத்தை வழிப்பட்டனர்.
கோயிலுக்குள் கட்டளைதாரர்கள், கோயில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலையில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.