கண்மணியே பேசு

கண்மணியே பேசு

கோதை

பாகம் : ஏழு

 

கணவன் மறைந்த பின்னர் ஏற்பட்ட துயரமும் அதனால் ஏற்பட்ட தனிமையும் கண்மணி  மனதில் பலத்த அடியொன்றை ஏற்படுத்தியிருந்தது. அதில் இருந்து விடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு அவள் நட்புகளும் குடும்பத்தவரும் தம்மால் முடிந்ததைச் செய்தாலும் அவளுக்கு என்னவோ எதிலும் லயிப்பிலாத ஒரு தன்மை வர வர அதிகரித்தது.

 

அவளது தோழி ஒருத்தி மட்டும் சிறிதே வித்தியாசமான அறிவுரை ஒன்றை அன்போடு அள்ளி வீச, கண்மணிக்கு அதுவும் ஒரு புதுவிதமான விடயமாகவே இருந்தது.

“இப்பிடியே எத்தனை நாலைக்குத் தான் இப்பிடி நாடிக்குக் கையைக் குடுத்துக் கொண்டே இருப்பாய்?  யாரோடையாவது மனம் விட்டுக் கதைச்சாதானே  கொஞ்சம் எண்டாலும் மனசுக்கு ஆறுதலாக இருக்கும்!”

 

“என்னத்தைக் கதைக்கிறதடி? யாரோட போய்க் கதைக்கிறது? யாருக்கு விளங்கப் போகுது ?” கண்மணி அலுத்துக்கொண்டாள்.

 

“அப்பிடிச் சொல்லாதயடி, உனக்குத் தெரிஞ்சவையோட கதைக்க விருப்பமில்லாட்டால், உனக்கு நான் ஒரு கவுன்செலராய் அறிமுகப்படுத்தி விடுறன்.”

 

“அதாரடியம்மா? என்னைத் தெரிஞ்சவைக்கே என்ர நிலைமை விளங்குதில்லை, இந்தக் கேவலத்தில முன் பின் தெரியாதவையோட என்னத்தைக்  கதைச்சு என்னத்தை…”

ஆற்றுப்படுத்துகை என்பது ஊரில் இருந்தவரையில்  பலவாறான சமூக உறவுப் பிணைப்புகளினூடாக எடுத்துச் செல்லப்பட்டதோடு அதனைத் தனியாக  பெரியளவில் அறிமுகப்படுத்தவோ அல்லது பயன்பாட்டில் இருத்தவோ எவரும் முனைந்தாரில்லை.  இதற்கு எம் சமூகத்தில் மன நோய் பற்றிய போதிய அறிவின்மையும்  அது பற்றிய செய்திகள் ஏற்படுத்தும் களங்கங்களை பலமாக எண்ணுவதும் தான்.

கண்மணிக்கும் அதெல்லாம் சரிப்பட்டு வரும் என்று தோன்றாததால் எதற்கும் தோழியின் மனதைப் புண்படுத்தாமல் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லி வைத்தாள்.     அந்த நேரத்தில் தான்   அவளுக்கு தான் பாடி வந்த சங்கீதமும் அவளுக்கிருந்த குரல் வளமும் அவளுக்கு ஞாபகம் வந்து போனது.

 

அதே வேளையில் அவளுடைய நல்ல காலத்திற்கு அவள் பாடிய ஒரு காணொளியைப் பார்த்த இசைத்துறையில் இருக்கும் சகோதர நட்பு ஒன்று அவளைத் தான் பாடும் பல இசைக்குழுக்களில்  ஒரு இசைக்குழுவில் பாடுவதற்காக அழைப்பு விடுத்திருந்தது.

 

இவள் தன் தோழியொருத்தியுடன் அந்த இடத்தை தேடிப் போகவும் அங்கு அந்த இசைக்குழுவில் பங்கேற்றிருந்த பலருடன் அந்த மூன்று வித்துவான்களும் அவளுடைய அழகில் ஸ்தம்பித்துப் போய் அவளை அப்படியே தம் கண்களால் உள்வாங்கிக் கொண்டனர். துரதிஷ்டவசமாக அப்படி ஒரு புதுமுகம் வருவது தெரியாததால் அவர்கள் தாம் அவ்விடத்தை விட்டு போக வேண்டியிருந்தது கண்டு, கவலையோடு வாசல் பக்கம் போகையில் தான் அவர்களுக்காக இருவர் வெளியே காத்திருந்தார்கள்.

கண்மணியுடன்  வந்த அவள் தோழி அவள் கையை நாசூக்காக இடித்து மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் இரகசியம் பேசினாள்.

“இவனுக்கு இங்க என்ன வேலையடி?”

 

“யாருக்கு என்ன வேலை?”

 

“உவன் தான் பொது மக்களின்ர காசெல்லாத்தையும் ஏப்பம் விட்ட நாதாரி!”

 

” யாரைப் பற்றிக் கதைக்கிறாய் ?” என்றவாறே தன் தோழி காட்டிய பக்கம் திரும்பியவள் சற்றே தடுமாறினாள்.

 

“கொஞ்சம் கொஞ்சமாய் முட்டாள் சனங்களுக்குப் புதுசு புதுசாய் புலி வருது கதை சொல்லிக்கொண்டு பதுக்கின காசுக்கு  தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களையும் நிறுவித் தனக்குத் தானே மேடைகளில மாலையும் போட்டுக் கொண்டு   திரியிற நாய்ப்பயல். ”

அவள் தோழியின் குரலிலிருந்த கோபத்தின் உச்சத்தை எப்போதும் பார்த்ததில்லை.

“பண்டியோட சேர்ந்த பசுவும் ஏதோ தின்னுமாம், இவனுக்கெல்லாம் ஒரு சிண்டு வேற!” தொடர்ந்தும் திட்டித் தீர்த்தாள்.

 

எப்பவும் இந்தப் பிரமுகரைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் ஏதோ உறுத்துமாப்போல் ஓர் உணர்வு.  எனக்கு மட்டும் தானா அல்லது எல்லாருக்கும் இப்படி இருக்கிறதா என யோசிக்கும் மனோ நிலையில் அவள் இருக்கவில்லை. ஆனால் இப்போது தன் தோழி,  ஒரு மாவீரர் குடும்பத்துப் பெண் சொல்லும் போதுதான் தன் உணர்வுகளும் சரியாகவே வேலை செய்வதாக உறுதிப்படுத்திக் கொண்டாள்.

வைத்தியத்துறைக்கே அவமானச் சின்னமாக விளங்கும் அந்தப் பிரமுகரையும் அவர் குடும்பத்தையும் அவர் குழந்தைகளையும் வஞ்சனை இல்லாமல் திட்டித் தீர்த்தவளை நிறுத்த முடியாமல் கண்மணிக்கு வியர்த்துக் கொட்டியது.

கண்மணிக்கு அப்போது அந்த பிரமுகரால் சில சிக்கல்கள் ஏற்படப் போகிறது என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சிக்கல்கள் தொடரும்…

Leave A Reply

Your email address will not be published.