மாஸ்டர் திரைப்படம், எப்படி, எப்போது வெளியிடப்படும்? ஓடிடி-யா? தியேட்டரா?
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்து உள்ளது.
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். இந்தப் படத்துக்கு இசை – அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரம் முழுவதும் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
கடந்த நவம்பர் 14 மாலை 6 மணிக்கு மாஸ்டர் பட டீசர் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இந்திய அளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் இது என்றும் படத்தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம் கிரியேடர்ஸ் தகவல் தெரிவித்தது.
சமீப காலமாக ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், சூர்யா நடித்த சூரரைப் போற்று, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. இதனால் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியானது.
மக்களிடம் கொரோனா குறித்த அச்சம் இன்னும் நிலவுவதால் திரையரங்குகளுக்கு வரத் தயங்குகிறார்கள்.
மேலும் தீபாவளி சமயத்தில் ஓடிடி தளங்களில் வெளியான சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்துள்ளார்கள்.
இந்தக் காரணங்களை முன்வைத்து படத்தைத் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளதாக பேசப்பட்டது. பெரிய தொகைக்கு டிஜிட்டல் உரிமையை விற்றுள்ளதால் வரும் பொங்கலுக்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியிடப்படுவதாக தகவல் ஒன்று வெளியானது. இதனால் சமூகவலைத்தளங்களில் இது குறித்த பேச்சு ஏற்பட்டது.
படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்கப்பட்டுள்ளது. திரையரங்கில் வெளியான பிறகே ஓடிடி தளத்தில் படம் வெளியிடப்படும் என்று மற்றொரு தகவலும் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
எனினும் ஜனவரியிலும் தற்போதைய நிலைமை நீடித்தால் மட்டுமே ஓடிடி தளத்தில் படத்தை நேரடியாக வெளியிடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியானது. இதனால் எந்தச் செய்தியை நம்புவது என்கிற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தனது திட்டத்தை தயாரிப்பாளர் முறையாக அறிவிக்கவேண்டும் என ரசிகர்கள் விரும்பினார்கள். இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் உறுதியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
அவர்களது அறிக்கையில், “ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓ.டி.டி. தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தாலும், தியேட்டரில் வெளியிடவே விரும்புகிறோம். ரசிகர்களும் மாஸ்டர் படத்தை தியேட்டரில் காணவே விரும்புகின்றனர். வதந்திகளை நம்ப வேண்டாம், விரைவில் நல்ல தகவல் வரும்” என கூறப்பட்டு உள்ளது.