அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.ரஜினிகாந்த்
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன் அதுவரை பொறுத்திருங்கள் என்று நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாகவும், உடல் நலம் கருதியும் நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவக்க மாட்டார் என, சமூக வலைதளங்களில் அவரின் பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மறுத்த ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்கள் உண்மையானவை என ஒப்புக் கொண்டார்.
இதனால், ரஜினி காந்த் கட்சி துவக்குவாரா மாட்டாரா என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, அரசியல் நிலைப்பாடு குறித்து, மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்பேன் என டுவிட்டர் வாயிலாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
அதன்படி, சென்னை, கோடம்பாக்கம், ராகவேந்திரா திருமண மண்டபத்தில், மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின் போது, கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? என ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனக்கூறிய ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.