மஹர சிறைச்சாலை அமைதியின்மை; இதுவரை 8 பேர் பலி
– விசாரணைகள் CIDயிடம் ஒப்படைப்பு
– பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இரு சிறை அதிகாரிகள் விடுவிப்பு
– அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்டோர் காயம்
– சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள்
– நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள்
மஹர சிறைச்சாலையில் கைதிகள் அமைதியற்ற வகையில் செயற்பட்டு தப்பிக்க முயற்சித்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் 8 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
நேற்று (29) பிற்பகல் ஆரம்பமான இவ்வமைதியின்மை, பின்னர் கலகமாக மாறியதன் காரணமாக, அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் குறித்த கைதிகள் மரணமடைந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் 2 பேர் மற்றும் சுமார் 50 கைதிகள் காயமடைந்து, ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டதோடு, நிலைமையை முற்றாக கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைதிகளால், சிறைக் கூடங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதோடு, தீ வைக்கப்பட்டதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன் இவ்வாறு ஏற்பட்ட தீ, இன்று காலையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தில், சிறை அதிகாரிகள் இருவரை பணயக் கைதிகளாக, கைதிகள் தம்வசம் பிடித்து வைத்திருந்ததாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவம் அவர் தெரிவித்தார்.
சம்பவத்தில், மஹர சிறைச்சாலை தாதியர் ஒருவரும், மருந்து விநியோகிப்பவருமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 8 பேர் மரணமடைந்துள்ளதாக, ராகமை போதனா வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் ஷெல்டன் பெரேரா, தெரிவித்தார்.
நேற்றையதினம் (29) இச்சம்பவத்தின்போது, சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த, 6 தீயணபப்பு வாகனங்களை ஈடுபடுத்தியாக, தீயணைப்பு பிரிவு அறிவித்திருந்தது.
சிறைக் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் அமைதியற்று நடந்து கொண்டதாகவும், பின்னர் அது இவ்வாறு கலகமாக மாறியதாகவும், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கவுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனருத்தாபன இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சின் செயலாளர் தலைமையில் விசேட குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.