கொரோனா தடுப்பு மருந்தும் பின்னணி அரசியலும் : சுவிசிலிருந்து சண் தவராஜா
சுமார் ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாக் கொள்ளைநோயை விரட்டியடிக்க மனித இனம் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் மகிழ்வைத் தருவதாக உள்ளன.
.
கொவிட்-19 என்ற பெயரிலான தீநுண்மியைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்தைக் கண்டு பிடிப்பதில் உலகின் வல்லரசு நாடுகள் பலவும் பல மாதங்களாக எடுத்துக் கொண்ட கடின முயற்சியின் விளைவாக ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
.
முதற்கட்டமாக கொரோனாவினால் அதிக இழப்புக்களைச் சந்தித்த நாடான அமெரிக்காவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 11 ஆம் 12 ஆம் திகதியளவில் பொதுமக்களின் பாவனைக்கு தடுப்பு மருந்து கிடைக்கும் என்ற மகிழ்சிகரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இருண்ட சுரங்கத்தின் இறுதியில் தோன்றும் ஒளிக் கீற்றுப் போல இந்தச் செய்தி ஒட்டு மொத்த மானுடத்தின் மனமகிழ்ச்சிக்கும் வழி சமைத்துள்ளது.
அமெரிக்க மருந்துகள்
அமெரிக்க மருந்து நிறுவனமான Pfizer மற்றும் அதன் துணை நிறுவனமான யேர்மனியைச் சேர்ந்த BioNTech ஆகியவை இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்துக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், அது தொடர்பாக ஆராய்வதற்காக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக தடுப்பு மருந்து ஆலோசனைக் குழு டிசம்பர் 10 ஆம் திகதி கூடுகின்றது. இந்தக் கூட்டத்தில் குறித்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்படுமாக இருந்தால், அடுத்த 24 மணி நேரத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும் என்கிறார் .
.
அமெரிக்க கொரோனா தீநுண்மி தடுப்பு மருந்துத் திட்டத்தின் தலைவர் மருத்துவர் Moncef Slaoui. மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அனுப்பி வைக்கப்படும் தடுப்பு மருந்து சுகாதாரப் பணியாளர்களுக்கும், முதியோருக்கும் முதற் கட்டமாக வழங்கி வைக்கப்படும் என்கிறார் அவர். இதே வேகத்தில் தடையின்றி தடுப்பு மருந்து வழங்கப்படுமாக இருந்தால் 2021 மே மாதத்திற்கிடையில் அமெரிக்க மக்கள் தொகையில் 70 வீதமானவர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டுவிடும் என்பது அவரது கணிப்பு.
.
இதேவேளை, தமது நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் 50 மில்லியன் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்துவிடும் என பைசர் அறிவித்துள்ளது. ஒருவருக்கு இரண்டு தடவைகளில் மருந்து ஏற்றப்பட வேண்டிய தேவை உள்ளதால் அமெரிக்காவில் உள்ள 25 மில்லியன் மக்கள் இதனால் உடனடியாக நன்மையடைவார்கள் என நம்பலாம்.
.
அதேவேளை, மற்றொரு அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான மொடெர்னாவும் தனது தயாரிப்பு மருந்தும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. தனது மருந்து 95 சதவீதம் நோய்க் காப்பு வழங்க வல்லது எனக் கூறியுள்ள மொடெர்னா, இன்னும் ஓரிரு வாரங்களில் தனது மருந்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஏனைய மருந்துகள்
மறுபுறம், சுவீடன் மருந்து நிறுவனமான Astrazenaca இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்தும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்டப் பரிசோதனைகளின் போது சிறிய பக்க விளைவுகள் அவதானிக்கப்பட்ட போதிலும், அவை மருந்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல என நிரூபணம் ஆனதை அடுத்து இவ்பொழுது மூன்றாம் கட்டப் பரிசோதனைகளின் பின்னர் மருந்து தயராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று தடுப்பு மருந்துகள் தொடர்பான செய்திகள் மேற்குலகின் பிரதான ஊடகங்களில் அதிகம் பேசப்படும் அதேவேளை உலகில் கொரோனாத் தீநுண்மிக்கு எதிரான முதலாவது தடுப்பு மருந்து என அறியப்படும் ரஸ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக்-வி தொடர்பாக அவை மௌனம் சாதித்து வருகின்றன. இதனை வெறுமனே ரஸ்ய எதிர்ப்பு எனக் கடந்துவிட முடியுமா? இல்லை வேறு காரணங்கள் உள்ளனவா?
.
100 பில்லியன் டொலர் சந்தை
கொரோனாக் கொள்ளை நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து என்பது இன்றைய நிலையில் உலகளாவிய சந்தையைக் கொண்டுள்ளது. தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ள மருந்துகள் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு, அனைவருமே நிர்ப்பீடனம் அடைந்த பின்னர் மீண்டும் தொற்று ஏற்படுமா என்பது இன்னமும் முடிவு செய்யப்படாத விடயம். சிலவேளை, மீண்டும் தொற்று ஏற்பட்டால் இதே மருந்துகள் மீண்டும் அவசியமாகலாம். தற்போது உள்ள நிலையில் இந்த மருந்து விற்பனை மூலம் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் எனத் தெரிகின்றது. இந்த வருமானத்தை யார் பெற்றுக் கொள்வது என்ற போட்டியே ரஸ்ய மருந்து தொடர்பில் மேற்குலக ஊடகங்கள் கடைப்படிக்கும் நிலைப்பாட்டிற்குக் காரணம் எனத் தெரிகின்றது.
ரஸ்யத் தடுப்பு மருந்து மட்டுமன்றி ஒக்ஸ்போர்ட் தயாரிப்பு மருந்து தொடர்பிலும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்கலாம். இந்த மருந்தின் தயாரிப்பாளர்கள் தாம் இலாப நோக்கமின்றியே மருந்தை உற்பத்தி செய்வதாகவும் எனவே தமது மருந்து 3 முதல் 4 டொலர் விலைக்கே விற்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். ரஸ்யா தனது மருந்தை 10 டொலருக்கு விற்கப் போவதாக அறிவித்துள்ளது.
.
மறுபுறம், பைசர் நிறுவனம் தனது மருந்தை 19.5 டொலருக்கும், மொடொர்னா 25 முதல் 37 டொலருக்கும் விற்கப் போவதாகத் தெரிவித்துள்ளது. சாதாரணமாக ஒருவர் இரண்டு தடவை தடுப்பு மருந்து ஏற்ற வேண்டிய நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள விலை மிக அதிகமாக உள்ளதைக் காணலாம். இது தவிர அமெரிக்கக் கண்டுபிடிப்பு மருந்துகளின் சேமிப்பு மற்றும் சந்தைப் படுத்தல் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ள அமெரிக்க மருந்துகளை 70 பாகை செல்சியஸுக்குக் குறைந்த வெப்பநிலையிலேயே வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால், உலகின் பின்தங்கிய நாடுகள் பலவற்றுக்கு இந்த மருந்தை எடுத்துச் செல்லுதல் மற்றும் சேமித்து வைத்தல் போன்றவை பாரிய சிக்கலைத் தரக் கூடியதாக உள்ளன.
.
அதேவேளை, வேறு வகைத் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள ரஸ்ய மற்றும் ஒக்ஸ்போட் மருந்துகள் சாதாரண குளிர்பதனப் பெட்டியிலேயே சேமிக்க வல்லவையாக உள்ளன. இதனால் இந்த மருந்தை வறிய, சுகாதார வசதிகள் குறைந்த நாடுகளும் பயன்படுத்தக் கூடிய சூழல் உள்ளது.
தனியார் நிறுவனங்களின் வல்லமை
அமெரிக்க மருந்துகளைத் தயாரிப்பவை தனியார் நிறுவனங்கள் ஆகையால் தங்கள் மருந்துகளின் விளம்பரங்களுக்காக அவை பெருந்தொகையில் செலவிடக் கூடிய வல்லமையைப் பெற்றுள்ளன. அதனால், தமது மருந்துக்குப் போட்டியாக உள்ள மருந்துகளின் தரத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதுடன், அவற்றின் பெறுமானத்தை மலினப் படுத்தும் வேலைகளையும் செய்து வருகின்றன. ரஸ்ய மருந்தைப் பொறுத்தவரை – பொதுவாகவே ரஸ்யாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ள மேற்குலக ஊடகங்கள் – அதனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பதைக் காண முடிகின்றது. அதேவேளை, மலிவான விலையில், அதிலும் வறிய நாடுகளுக்கும் பயன்தரக் கூடிய விதத்தில் மருந்தை உற்பத்தி செய்ய முனையும் ஒக்ஸ்போட் மருந்தையும் கேள்விக்கு உட்படுத்தும் செய்திகளே ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.
.
ரஸ்யாவைப் பொறுத்தவரை தனது நாட்டு மக்களுக்கு மருந்தை இலவசமாக வழங்கப் போவதாகத் தெரிவித்துள்ளதுடன், தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகத்தின் அங்கீகாரத்திற்குத் தனது மருந்தை அனுப்பி வைத்துள்ள ரஸ்யா, உலகில் உள்ள 50 க்கும் மேற்பட்ட நாடுகள் தனது மருந்துக்கு விண்ணப்பித்துள்தாகத் தெரிவித்துள்ளது. ஒரு பில்லியன் தடுப்பு மருந்தை அடுத்த வருடத்தில் உற்பத்தி செய்ய எண்ணியுள்ளதாகவும், யனவரியில் முதலாவது ஏற்றுமதி நிகழும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அந்த நாடுகளில் வாழும் 500 மில்லியன் மக்கள் பயன் பெற உள்ளனர். இந்த மருந்து விற்பனை மூலம் ரஸ்யாவிற்கு 100 பில்லியன் டொலர் வரை வருமானம் கிட்ட வாய்ப்புள்ளது. உலகில் தானிய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள நாடான ரஸ்யா ஆண்டொன்றிற்கு ஈட்டும் வருமானத்திற்கு அது சமமானது.
.
இதேவேளை, கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி மற்றும் போலந்து ஆகியவையும் ரஸ்யாவிடம் இருந்து தடுப்பு மருந்தைப் பெறவுள்ளன. துருக்கி இது தொடர்பான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுள் ஒன்றான ஹங்கேரியில் ரஸ்ய மருந்துகளின் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பலமிக்க நாடுகளில் இருந்து இதற்கெதிரான ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டுள்ளன. இத்தகைய ஆட்சேபனைகள் ரஸ்யாவை ஒதுக்குவதாக நினைத்துக் கொண்டு மக்களின் உயிரோடு விளையாடும் நடவடிக்கைகளாகவே பார்க்கப்பட வேண்டும்.
தடுப்பு மருந்தின் வரலாறு
பொதுவாக தீநுண்மிகளுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட ஆகக் குறைந்தது 18 முதல் 24 மாதங்களாவது தேவை. ஆனால், கொரோனா தீநுண்மிக்கு எதிரான மருந்தைக் கண்டு பிடிப்பதற்கு உலகம் 10 மாதங்களையே எடுத்துக் கொண்டுள்ளது. மனித குலத்தின் சாதனை எனக் கொண்டாடப்படக்கூடிய இந்தக் கண்டு பிடிப்பு சில வேளைகளில் மனித குலத்தின் வேதனையாகவும் அமையலாம். அது சாதனையா வேதனையா என அறிந்து கொள்வதற்கு நாம் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். உலகின் பல கோடி மக்களுக்கு தடுப்பு மருந்தை வழங்கிய பின்னர் அதனால் விளையக் கூடிய சாதக பாதகங்களைக் கொண்டே இதனை அளவிட முடியும்.
.
பொதுவாக தீநுண்மிகள் தொடர்ச்சியாகத் தம்மை உருமாற்றிக் கொண்டே இருக்கும் வல்லமை கொண்டவை. கொரோனாத் தீநுண்மியும் கடந்த டிசம்பரில் சீனாவின் வூகானில் முதன்முதலாகக் கண்டறியப்பட்ட நாள்முதலாக இன்றுவரை பல தடவைகள் தம்மை உருமாற்றிக் கொண்டுள்ளன. எனினும், 5 வருடங்கள் கடந்தும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத பறவைக் காய்ச்சல், சார்ஸ் மூச்சுத் திணறல், மேர்ஸ் எனப்படும் மத்திய கிழக்கு சுவாசநோய் போன்ற நோய்களுக்கான மருந்து கண்டு பிடிப்புக்காக மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆய்வுகளே கொரோனாத் தீநுண்மிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதை இலகுவாக்கியது.
.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் பட்டாகிவிட்டது. சமத்துவம் இல்லாத இந்த உலகில் செல்வந்த நாடுகளே முதலில் இந்த மருந்தைப் பெற்றுக் கொள்ளவுள்ளன. சுகாதார மேம்பாடு, சேமிப்பு வசதிகள் என்பற்றோடு நாங்கள் ஏற்கனவே மருந்துகளுக்கான கொள்வனவு உத்தரவுகளை வழங்கி விட்டோம் எனப் பல காரணங்களை இந்த நாட்டு அரசாங்கங்கள் கூற முடியும். குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் யனவரி மாத இறுதிப் பகுதியில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.
.
அதேவேளை, வறிய, பின்தங்கிய நாடுகள் இந்தத் தடுப்பு மருந்தைப் பெற இன்னும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். சுகாதார வசதிக் குறைபாடு, சேமிப்பு வசதிகள் இன்மை, முன்கூட்டியே கொள்வனவு உத்தரவுகளைத் தந்திருக்கவில்லை, போக்குவரத்துப் பிரச்சனை எனப் பல காரணங்களை மருந்து நிறுவனங்கள் எடுத்துக் கூற முடியும்.
கொரோனாக் கொள்ளைநோய் என்பது உலகளாவியது. தீநுண்மியின் பரவல் நாட்டு எல்லைகளுக்குள் கட்டுப்பட்டு இருக்கவில்லை. அதைப் போன்றே, கட்டுப் படுத்தல் நடவடிக்கைகளும் நாட்டு எல்லைகளைக் கணக்கிலெடுக்காமல் பொதுவானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்” என்ற நீதி(?) கடைப்பிடிக்கப்படும் உலகில் இது போன்று நடக்காமல் இருந்தால்தான் அது ஆச்சரியமான விடயம்.