சிறை வன்முறைக்கு அரசே பொறுப்புக்கூற வேண்டும்! நாடாளுமன்றில் ஜே.வி.பி. வலியுறுத்து.
சிறை வன்முறைக்கு அரசே
பொறுப்புக்கூற வேண்டும்!
நாடாளுமன்றில் ஜே.வி.பி. வலியுறுத்து
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைக்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மஹர சிறைச்சாலையில், நேற்றிரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கும் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தண்டனை பெறுபவர்கள் சிறைச்சாலைகளில் இருந்தாலும், அவர்கள் அரசின் பொறுப்பில் இருப்பதாகவே கருதப்படும். எனவே, இந்தச் சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது உடனடியாக எழுந்த சர்ச்சை அல்ல. ஏற்கனவே மஹர உள்ளிட்ட சிறைச்சாலையில் உள்ளவர்களைக் கொரோனா அச்சுறுத்தலை அடுத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வந்தார்கள்.
மஹர சிறைச்சாலையில் கொரோனாவால் மட்டும் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சிறைச்சாலைகளில் இருவர் இருக்க வேண்டிய இடத்தில் 8 பேரளவில் இருக்கின்றார்கள்.
இதனால்தான் கொரோனா வைரஸ் அங்கு வேகமாகப் பரவி வருகின்றது. இந்தநிலையில், தங்களை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுதான் கைதிகள் கோரியிருந்தார்கள். இது நியாயமானதொரு கோரிக்கையாகும். இதனை நிராகரித்தமையால்தான் இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்துக்குக் கொஞ்சம்கூட ஏற்புடையதல்ல. இது தொடர்பாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் உரிய பதிலை வழங்க வேண்டும்” – என்றார்