கோட்டாபய அரசின் உச்சபட்ச அராஜகம்! இரா.சம்பந்தன்

கோட்டாபய அரசின் உச்சபட்ச அராஜகம்!
யாழ். பல்கலை மாணவன் கைதுக்கு
எதிராகச் சம்பந்தன் கடும் கண்டனம்
“தமிழ் மக்கள் தங்கள் பண்டிகைகளையும் சுதந்திரமாகக் கொண்டாட முடியாத நிலையை அரசும் அதன் படைகளும் ஏற்படுத்தியுள்ளன. நேற்றுப் பல இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தடை விதித்தமையும், யாழ். பல்கலைக்கழக வாயிலில் தீபம் ஏற்றிய அப்பல்கலைக்கழக மாணவன் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்தமையும் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இது கோட்டாபய அரசின் உச்சபட்ச அராஜகமாகும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கார்த்திகை தீபம் தமிழ் மக்கள் கொண்டாடும் பழமையான பண்டிகைகளில் ஒன்று. அதைத் தடுத்த நிறுத்த பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் யார் அதிகாரம் கொடுத்தது?
அரசின் உயர்மட்டத்தால் பொலிஸாரும் இராணுவத்தினரும் தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள்போல் தெரிகின்றது.
போரில் இறந்த தமது உறவுகளைத் தமிழ் மக்கள் நினைவேந்தத் தடை விதித்த இந்த அரசு, தற்போது தமிழ் மக்கள் தாக்குரிய பண்டிகளைக் கொண்டாடவும் அனுமதி மறுத்துள்ளது. இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசு தனது படைகளைத் தமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடுவதை உடன் நிறுத்த வேண்டும். இல்லையேல் வீதிகளில் மக்கள் இறங்கி அரசுக்கு எதிராகப் போராட வேண்டிய நிலைதான் வரும்” – என்றார்.