தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் கிழக்கில் காற்றுடன் கூடிய பலத்த மழை.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் கிழக்கில் காற்றுடன் கூடிய பலத்த மழை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் காற்றுடன் கூடிய பலத்த மழை இன்று (01) பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், தாழ்நில குடியிருப்பு பிரதேசங்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயமும் காணப்படுகின்றது.
இதேவேளை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளதனையடுத்து கிழக்கு மாகாணத்தில் மீனவர்கள் எவரும் இன்று கடலுக்குச் செல்லவில்லை.
வங்காள விரிகுடாவின் வடமேற்கு பிராந்தியத்தில் உருவாகியுள்ள வளிமண்டல தாழமுக்கமானது திருகோணமலையில் இருந்து 750 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டுள்ளதனால் கிழக்கு மாகாண மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்பின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பிராந்தியங்களில் நாளை முதல் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடற் பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்கள் கடும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை 2 ஆம் திகதியிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு கடற் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 100 கிலோ மீற்றறையும் தாண்டி அதிகரிக்கும் வாய்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், தெற்கு மற்றும் ஏனைய சில மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வாளிலை நிலவும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் 100 முதல் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 2 ஆம் திகதியில் இருந்து நாட்டை சூழவுள்ள அனைத்து கடற் பிராந்தியங்களிலும் கடற்றொழில் ஈடுப்படும் மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டு மக்கள், விசேடமாக கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உடனுக்குடனான அறிவுறுத்தல்களை கனவனத்தில் கொண்டு செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக மழை விழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம், மண்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சீரற்ற காலநிலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை ஆகிய கடற்கரை பிரதேசங்களில் கடலின் சீற்றம் அதிகரித்துக் காணப்படுவதுடன் இப்பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகின்றது.
சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதனையடுத்து, இப்பிரதேசங்களிலுள்ள நூற்றுக் கணக்கான ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன கடற்கரையின் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
இச்சீரற்ற காலநிலை காரணமாக கடற்தொழிலாளர்களின் தொழில் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இன்று காலை (01) முதல் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.