வங்காள விரிகுடாவில் தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியத்திற்குள் புயலாகலாம்.
வங்காள விரிகுடாவில் தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை மதியத்திற்குள் புயலாகலாம் நா.பிரதீபராஜா
வங்காள விரிகுடாவில் தற்போது ( 01.12.2020 4.45 பி.ப) காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாளை மதியத்திற்கு முன்பாக( புயலுக்கு தேவையான காற்று சுழற்சி இன்னும் உருவாகவில்லை) புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது நாளை பிற்பகலுக்கு பின்னர் திருகோணமலைக்குள் நிலப்பகுதி நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை மாலை 4.00 மணியளவில் புயலின் வெளிவளையம் திருகோணமலையின் கடற்கரையை அண்மிக்கும்.
அதன்பின்னர் கிட்டத்தட்ட 3.30 மணி நேரத்துக்கு மேலாக திருகோணமலைக்கு அண்மித்து நிலைத்து நிற்கும் இப்புயல் இரவு 11.30 மணியளவில் அனுராதபுரம் மற்றும் வவுனியாப் பகுதியில் காணப்படும் இப்புயலானது வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மன்னார் மற்றும் புத்தளத்தின் வடபகுதிக்குள் பிரவேசித்து காலை 7.00 மணியளவில் அரபிக்கடலுக்குள் நகரும்.
இது இன்னமும் புயலுக்குரிய காற்றுச் சுழற்சியைப் பெறாமையினால் இதன் நகர்வுப்பாதையும் நேரமும் வேறுபடலாம் என்பதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
திருகோணமலையில் அல்லது அதனை அண்மித்த பகுதியில் இது கரையை அடையும்போது காற்று கடும் வேகத்தில் வீசுவதோடு மிகக் கனமழையும் பொழிய வாய்ப்புண்டு. இந்தப் புயலின் மிக ஆபத்தான பகுதியாக திருகோணமலை மாவட்டம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளே இருக்கும் என்பதனால் நாளை(02.12.2020) காலை 6.00 மணியிலிருந்து அவதானமாகவும் போதுமான தயார்ப்படுத்தலுடனும் இருப்பது அவசியம்.
வவுனியாவின் பல பகுதிகளும் குறிப்பாக வவுனியா தெற்குப் பகுதி புயலின் முழுச் செல்வாக்குப் பகுதிக்குள் வருவதனால் காற்றின் வேகம் உயர்வாக இருக்கும் என்பதுடன் மிகக் கனமழையும் பொழிய வாய்ப்புண்டு. ஆகவே இப்பகுதி மக்களும் நாளை பகல் 2.00 மணியிலிருந்து மிகக் கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
அனுராதபுரத்தின் வட பகுதி புயலின் செல்வாக்கினுள் வருவதால் இப்பகுதி மக்கள் நாளை நண்பகல் 12.00 மணியிலிருந்து அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.
புத்தளத்தின் வடக்குப் பகுதி மற்றும் மன்னாரின் தெற்குப் பகுதியூடாக புயல் அரபிக் கடலுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுவதனால் அரிப்பு,சிலாவத்துறை, முள்ளிக்குளம், பொம்மரிப்பு, எழுவங்குளம், தந்திரிமலைப் பகுதி மக்கள் எதிர்வரும் 02.12.2020 புதன் நள்ளிரவிலிருந்து மிக அவதானமாக இருத்தல் அவசியம். மிகக் கடுமையான வேகத்தில் காற்று வீசக் கூடும் அத்துடன் மிகக்கனமழையும் கிடைக்கும்.
திருகோணமலைப் பகுதியில் புயல் கரைதொடும்பொழுது அதன் உள் மற்றும் வெளி வளையத்திற்குள் #முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பின் பல பகுதிகள் உள்வாங்கப்படுமாகையால் #நாளை நண்பகலிலிருந்து இந்தப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியமாகும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலையிலிருந்து பரவலாக மழை தொடங்கி நண்பகலுக்குப் பின்னர் கன மழை பொழிய தொடங்கும். காற்றின் வேகமும் உயர்வாக இருக்கும். எனவே மிக அவதானமாக இருத்தல் அவசியம்.
வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படும். எனவே எந்தக் காரணம் கொண்டும் கடற்பகுதிக்குள் அல்லது கடற்கரைப் பகுதிக்குள் செல்ல வேண்டாம்.
வடமராட்சி கிழக்கு, #முல்லைத்தீவு, திருகோணமலை, மற்றும் மட்டக்களப்பின் கரையோரப் பகுதிகளில் நாளைமுதல் பலத்த காற்று வீசுவதுடன் அலைகளின் உயரமும் உயர்வாக இருக்கும் என்பதனால் மீனவர்கள் தங்களின் கடற்கலங்களை பாதுகாப்பாக நிறுத்துவது உசிதமானது.
புயலின் போது மரங்கள் முறிந்து வீழ்வதனாலும் மின் கம்பங்கள் சரிவதனாலும் மின்சார வடங்கள் அறுந்து போய் இருக்கலாம். ஆகவே அவற்றுக்கு அண்மையாகக்கூட செல்லாதீர்கள்.
உங்களின் வீடுகளுக்கு அண்மித்துக் காணப்படும் கடும் காற்றினால் பாதிக்கப்படும் மரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றை உடனடியாக அகற்றுங்கள்.
மிக முக்கியமாக தற்காலிக வீடுகளில் இருப்பவர்கள் உங்கள் தகரக்கூரைகள், மண்சுவர்கள், கூரை மரங்கள் மற்றும் மின்னிணைப்புக்கள் மீது மிகுந்த அவதாரமான இருங்கள்.
இந்த ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.