தமிழ் இந்து மக்களின் மத உரிமைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும்! தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு அறிக்கை.

தமிழ் இந்து மக்களின் மத உரிமைகளை இலங்கை அரசு அங்கீகரிக்க வேண்டும்!
தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டு அறிக்கை.
தமிழ் இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும் பொலிஸும் இணைந்து குழப்பியதற்கு எதிராகவும், அரசு இது குறித்து எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளாததைக் கண்டித்தும் தமிழ்த் தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சோ. சேனாதிராஜா கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-
“தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு. பாரம்பரியமாகவே மத அனுஷ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ்த் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது. அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது. அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பின்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.
தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகப் போராடி மரணித்துப் போனவர்களைத் தமிழ் மக்கள் அஞ்சலிக்கக்கூடாது என்பதற்காக, அரசு பொய்யான தவறான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கி, தமக்காக மரணித்துப் போனவர்களுக்கு அஞ்சலிப்பதற்குத் தடையினைப் பெற்றிருந்தார்கள். அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இராணுவமும் பொலிசாரும் இணைந்து பல இடங்களில் மிக அநாகரிகமான முறையில், அந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் அதனைத் தடுத்து, அச்சுறுத்தி அவர்களை அடக்க முயற்சித்தார்கள்.
இலங்கையில் இருக்கக்கூடிய மக்கள், தாம்தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்றுவதற்கும், அதனை அனுஷ்டிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் அரசியல் சாசன ரீதியாக சகல உரித்தும் உடையவர்கள். ஆனால், கடந்த 29ஆம் திகதி இந்து மக்களின் கார்த்திகை விளக்கீட்டின்போது புதுக்குடியிருப்பு, பரந்தன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, வலிகாமம் போன்ற பல பகுதிகளில் இராணுவத்தினரும் பொலிஸாரும் வீடுகளுக்குள் சென்றும், இந்து ஆலயங்களுக்குள் அத்துமீறி நுழைந்தும், அவர்கள் பக்தியோடு ஏற்றிய தீபங்களை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்து அவர்களது அனுஷ்டானங்களை அவமதித்ததுடன், சில பெரியோர்கள் தாக்கப்பட்டும் இருக்கின்றார்கள். கோவில் அர்ச்சகர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றார்
இந்து மக்களின் மிக முக்கிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இலங்கை அரசின் பொலிஸாரும் இராணுவத்தினரும் திட்டமிட்ட வகையில் ஆயுத முனையில் குழப்பியிருக்கிறார்கள். கார்த்திகை விளக்கீடு என்பது இந்து மக்களின் மிக முக்கியமான அனுஷ்டான நாள் என்பதும், காலாதிகாலமாக அதனை அவர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதும், இலங்கை அரசுக்கும் பொலிஸாருக்கும் படையினருக்கும் தெரிந்த விடயம்.
உண்மைநிலை அப்படியிருக்க, அதனை அச்சுறுத்தித் தடை செய்ய முயற்சிப்பது என்பது தமிழ் மக்களின் மத வழிபாட்டுரிமையைப் பறித்தெடுப்பதாகும். அரசின் திட்டமிட்ட இந்தச் செயற்பாடானது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தம்மை ஒரு ஜனநாயக அரசு எனக் கூறிக்கொள்ளக் கூடியவர்கள் இன்னுமொரு தேசிய இனத்தின் மத உரிமையை அச்சுறுத்திப் பறிப்பதென்பதும் தடை செய்வதென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.
படையினரதும், பொலிஸாரினதும் இந்தத் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு அரசு மன்னிப்புக் கோரவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என்னும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.
அரசு தமிழ் மக்களுடைய மொழி, மத, நில உரிமைகளைத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்குமாக இருந்தால், தமிழ் மக்களைத் தொடர்ச்சியான ஓர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசே வழிசமைக்கின்றது என்று பொருள்படும்.
தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் கோரிக்கைகளுக்கு இசைவாக அரசு உடனடியாக தனது மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் அல்லது குறைந்தபட்சம் நடந்து முடிந்த சம்பவங்களுக்குத் தனது வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் வழிபாட்டுரிமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” – என்றுள்ளது.
[pdf-embedder url=”https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/12/Doc20201202120428.pdf”]
[pdf-embedder url=”https://www.ceylonmirror.net/wp-content/uploads/2020/12/Doc20201202120350.pdf”]