வல்வெட்டித்துறையில் இன்றிரவு மினி சூறாவளி; 4 பேர் படுகாயம்! – 50 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை – ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் இன்றிரவு வீசிய மினி சூறாவளியால் 50 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
திடீரென வீசிய கடும் காற்றால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
வீடு ஒன்றின் கூரை வீழ்ந்து சிறுமி உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பீற்றர் மஹிந்தன் (வயது 35) என்பவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்படடார். இவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.