புலிகளைப் போற்றும் புலம் பெயர் நடவடிக்கைகளை ஐ.நா ஊடாக தடுக்க முயல வேண்டும் : றொகான் குணரட்ண
புலிகளைப் போற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் தடைப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக ஐ.நா ஊடான தடைமுயற்சியை மேற்கொள்ளவேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகரான பிரபல பேராசிரியர் றொகான் குணரட்ண கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையினர் தீவிரமயமாக்கப்படும் வாய்ப்பு அதிகமாயிருப்பதாகவும், அதனால் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்துக்குள் அவ்வியக்கத்தை உட்படுத்தி உலகளாவிய ரீதியில் பயங்கரவாத பட்டியலில் சேர்த்துவிடுவதற்கு இலங்கை அரசு உடனடியாக ஆவன செய்தாக வேண்டும் என்று றொஹான் குணரட்ண தெரிவித்துள்ளார்.
சிவப்பு மஞ்சட் கொடிகளைப் பயன்படுத்துவதையோ, புலிச் சின்னங்களையோ தொடர்புபட்ட குறியீடுகளையோ பகிரங்க வெளியில் பயன்படுத்தவோ அனுமதிக்கலாகாதென்றும் குணரட்னா சண்டே ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகைக்குக் கருத்து வெளியிட்டிருந்தார்.