புரவி எனும் சூறாவளி தாக்கம் : திருகோணமலை – மன்னார்
திருகோணமலை
புரவி எனும் சூறாவளி தாக்கம் அனர்த்தமாக மாறும் என வளிமண்டவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறலை அடுத்து திருகோணமலையில் உள்ள மக்களும் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக கரையோர பிரதேச மக்கள் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இரவு வேளைகளில் பலத்த காற்றுடன் ஓரளவு மழை பெய்தமையும் திருகோணமலை மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா,மூதூர், குச்சவெளி, தம்பலகாமம், திருகோணமலை உள்ளிட்ட 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்களுக்காக பிரதேச செயலாளர் ஊடாக முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, வீதி ஓரங்களில் மழை காரணமாக நீர் வடிந்தோட முடியாமலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடைகளும் ஏற்பட்டுள்ளன. இதனால் உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள், முப்படையினர்கள் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதற்கு மேலதிகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட கிளை ஊடாகவும் மருத்துவ மற்றும் முதலுதவி சேவைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார்
புரெவி சூறாவளியின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 1,108 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 845 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 950 குடும்பங்களைச் சேர்ந்த 3,045 நபர்கள் 15 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் தமது வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கான சமைத்த உணவுகளை வழங்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலகர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காற்று மற்றும் மழை காரணமாக தலைமன்னார் ஊர்மனை, தலை மன்னார் பியர், பேசாலை ,விடத்தல்தீவு, சாந்திபுரம் மற்றும் சௌத்பார் ஆகிய கிராமங்களில் உள்ள மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த சூறாவளி தாக்கத்தினால் மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான படகு உற்பட கடற்தொழில் உபகரணங்கள் சேதமாகி உள்ளது.
மேலும் தலை மன்னார் பியர் கடற்கரையோரப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சில காணாமல் போயுள்ளதுடன் , படகுகள் வாடிகள் , மீன்பிடி உபகரணங்கள் சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துளள்னர்.
பேசாலை பகுதியில் 100 க்கும் அதிகமான படகுகள் கரையில் ஒதுக்கப்பட்டு உடைந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது.
மீனவர்களின் வாடியும் சேதமாகி உள்ளது. வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
மக்களினதும், மீனவர்களினதும் பாதிப்புக்கள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல், பிரதேச செயலாளர்கள்,மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.