புரேவி புயலானது வடக்கினூடாக கரையைக் கடந்துள்ளது.

03.12.2020 நேரம் 3.30 பிற்பகல்
புரேவி புயலானது வடக்கினூடாக கரையைக் கடந்துள்ளது.
மிக நீண்ட நேரமாக நகராது புயலின் மையம் பூநகரி மற்றும் வெள்ளாங்குளத்திற்கு மேற்காக கடல் பிரதேசத்தில் வலுக்குறைந்த நிலையில் நிலை கொண்டிருந்தது(புயலின் வெளிவளையத்தின் ஒரு பகுதி மாந்தை மேற்கு, பூநகரி, மற்றும் யாழ்ப்பாணத்தின் மேற்குப்பகுதியிலும் காணப்பட்டது).
தற்போது (நேரம் 3.00 பிற்பகல்) வலுக்குறைந்த புயலாக பாக்கு நீரிணைப்பகுதிக்குள் நகர்ந்துள்ளது. இது நாளை நண்பகல் வரை இப்பகுதியில் நீடித்து மேலும் வலுக்குறைந்து அதன் பின் தென் தமிழகத்தின் நாகப்பட்டினம் அல்லது வேதாரண்யம் அல்லது இராமேஸ்வரம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்புயல் கரையைக் கடக்கும் வரை வடக்கு மாகாணத்திற்கு அண்மித்த கடற்பகுதியில் (பாக்கு நீரிணை) நீடிக்கும் என்பதனால் எமக்கு அவ்வப்போது மழை கிடைக்கும். தீவுப் பகுதிகள் மற்றும் வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் கடலலைகளின் உயரம் சற்று உயர்வாக காணப்படும் அத்துடன் இப்பகுதிகளில் பரவலாக மழை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கியமாக
இன்று இரவும் (03.12.2020) வடக்கு மாகாணத்திற்கு சில மணி நேரத்திற்கு சற்று கனமழை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே கிடைத்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சற்று அவதானமாக இருப்பது அவசியமாகும்.
மேலதிக விபரங்கள் தொடர்ந்தும் இற்றைப்படுத்தப்படும்.
– நாகமுத்து பிரதீபராஜா –