திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் பட்ஜட் தோற்கடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இவ் வரவு – செலவுத் திட்டம் தவிசாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜீ.ஞானகுணாளனால் இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து 22 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் பகிரங்க வாக்கெடுப்புக்கு வரவு – செலவுத் திட்டம் விடப்பட்டது.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள், சுயேச்சைக் குழுவின் 2 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் உப தவிசாளர் நவ்பர் ஆகியோர் உட்பட 10 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 7 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்கள், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஓர் உறுப்பினர், வரதர் அணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஓர் உறுப்பினர் உட்பட 12 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
அதற்கமைவாக வரவு – செலவுத் திட்டம் இரண்டு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.