கிளைமோர் குண்டுடன் தம்பதியினர் பரந்தனில் கைது
யாழ்ப்பாணத்திலிருந்து கண்டிக்குச் செல்லும் பயணிகள் பேருந்தில் கிளைமோர் குண்டோடு பயணித்த தம்பதியை பரந்தனில் வைத்து போலீசார் நேற்று (02) கைது செய்துள்ளனர்.
இந்த ஜோடி யாழ்ப்பாணம் பகுதியில் கம்பளங்களை தயாரித்து விற்பவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் கிளைமோர் குண்டை கம்பளங்களுடன் ஒரு பையில் மறைத்து வைத்திருந்துள்ளனர்.
விசாரணையின் போது, இத் தம்பதியினர் திருகோணமலையில் இருந்து பரந்தனுக்கு வரும் ஒருவரிடம் கொடுப்பதற்காக இந்த கிளைமோர் வெடிகுண்டை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்துள்ளனர்.
கடந்த காலத்திலும் இதேபோன்ற கிளைமோர் குண்டை அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
இராணுவ புலனாய்வு வட்டாரங்களின்படி, இந்த கிளைமோர் குண்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாக தெரிய வந்துள்ளது. நாசவேலை நடவடிக்கைக்கு ஒன்றுக்காக பயன்படுத்தவே இது கொண்டு போகப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஒருவரது பணிப்பில் இந்த கிளைமோர் குண்டை கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நபர் 2014 ஆம் ஆண்டில் இராணுவம் மற்றும் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின் போது இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கிளைமோர் குண்டு மற்றும் அது எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பன குறித்து நீண்ட விசாரணையொன்று தொடங்கப்பட்டுள்ளது.