தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி: ரஜினிகாந்த்
சென்னை: தமிழக மக்களுக்காக உயிர் போனாலும் சந்தோஷம்தான் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது:
2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்டு சட்டசபை தேர்தல் வரும்போது, அதற்கு முன்பாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அப்போது கூறியிருந்தேன். பிறகு நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்கும்போது மக்களிடம் எழுச்சி வர வேண்டும் என்று கூறியிருந்தேன். எழுச்சியை உண்டாக்கிய பிறகு தான் கட்சி துவங்குவேன், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்யலாம் என்று நான் திட்டமிட்டு இருந்தேன். கொரோனா காரணமாக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய முடியவில்லை. மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மருத்துவ ரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
கொரோனா காரணமாக தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய முடியவில்லை. மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது மருத்துவ ரீதியாக ஆபத்து என்று மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் சிங்கப்பூரில் நான் சிகிச்சை பெறும்போது தமிழக மக்களின் பிரார்த்தனை, வேண்டுதலால்தான் உயிர் பெற்று வந்தேன். அவர்களுக்காக இப்போது என் உயிரே போனாலும் சந்தோஷப்படுவேன். கொடுத்த வார்த்தையை நான் என்றுமே தவறமாட்டேன்.
அரசியல் மாற்றம் மிகவும் கட்டாயம், காலத்தின் தேவை, மிகவும் முக்கியம், அது நடந்தே ஆக வேண்டும். இப்போது இல்லாவிட்டால் எப்போதுமே கிடையாது. மாற்ற வேண்டும், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், நான் ஒரு சிறிய கருவிதான். மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. அரசியலில் வெற்றி பெற்றால் அது மக்களுடைய வெற்றி, தோல்வி அடைந்தால் மக்களுடைய தோல்வி.