மஹர சிறை வன்முறை: கைதிகளின் சடலங்களை எரிப்பது தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
மஹர சிறை வன்முறை: கைதிகளின் சடலங்களை எரிப்பது
தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களை எரிப்பது தொடர்பான வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, வத்தளை நீதிவான் புத்திக்க சீ. ராகல முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், கைதிகளில் மற்றுமொரு தரப்பினர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடந்த 29 ஆம் திகதி மாலை மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தில் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், 115 கைதிகளும் 2 சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்தனர்.
இதையடுத்து, உயிரிழந்த சிறைக் கைதிகளில் 9 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், கைதிகளின் சடலங்களை எரிக்கப்படுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தி, கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு விதிமுறைகளுக்கமைய, உயிரிழந்தவர்களின் சடலங்களைப் புதைப்பது தொடர்பில் சட்டச் சிக்கல் காணப்படுகின்றது எனத் தெரிவித்து, ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் வத்தளை நீதிவான் புத்திக சீ. ராகலவுக்கு அறிவித்துள்ளனர்.
எனினும், கைதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டால் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதுடன், குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் எனக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா விடயங்களை முன்வைத்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை எரிப்பதற்கான கட்டளைச் சட்டம் சாதாரண நிலைமைகளின்போது அமுல்படுத்தப்பட்டாலும், கொலைக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இந்தக் கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்த முடியுமா? எனச் சட்டத்தரணி சேனக பெரேரா நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை அன்று நீதிமன்றத்துக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.