மஹர சிறை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட கைதிகளின் சடலங்களைத் தகனம் செய்யாதீர்!

மஹர சிறை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட கைதிகளின் சடலங்களைத் தகனம் செய்யாதீர்!
அரசிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை
“மஹர சிறைச்சாலை வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட கைதிகளுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும், மரண விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களின் சடலங்களைத் தகனம் செய்ய வேண்டாம்.”
– இவ்வாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அரசின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கைதிகள் வன்முறையில் ஈடுபடுவதற்கு பிரதானமாக மூன்று காரணங்கள் உள்ளன என்று மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சிறையில் காணப்பட்ட நெரிசல், கொரோனா வைரஸ் தொடர்பான பயம் மற்றும் அதற்கு எதிரான போராட்டம் ஆகியவையே பிரதான காரணம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ரமணி முத்தெட்டுவேகம குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 29 ஆம் திகதி நடந்த மோதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு மஹர சிறைச்சாலைக்குச் சென்று இரண்டு தடவைகள் விசாரித்ததைத் தொடர்ந்து முதற்கட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மஹர சிறைச்சாலை உள்ளிட்ட சிறைகளில் நெரிசலைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய கைதிகளை சிறைகளுக்கு அழைத்து வரும்போது, அவர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைதிகளின் உடல் நலம் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கைதிகள் மத்தியில் அச்சத்தைக் குறைக்க வேண்டுமாயின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் தனி சிறை மற்றும் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிர் அபாயத்தில் உள்ள கைதிகள் மற்றும் சிறிய தவறுகளுக்குத் தண்டனை அனுபவிக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசிடம்மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.