நடராஜனை நான் தேர்வு செய்த போது, துளைத்தெடுக்கப்பட்டேன்.மனம் திறந்த சேவாக்.

நடராஜனை நான் தேர்வு செய்த போது, துளைத்தெடுக்கப்பட்டேன். மூன்று வருடங்களுக்கு பிறகு மனம் திறந்த சேவாக்
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக நடராஜனை 3 கோடி ரூபய் கொடுத்து வாங்கிய போது, ஒவ்வொருவரும் என்னை கேள்விகளால் துளைத்தெடுத்தனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர், வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய, தமிழ்நாட்டைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் தொடர்ச்சியாக யார்க்கர் பந்துகளை வீசி அசத்தினார். தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் விளையாட நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இதே அணியில் இடம் பெற்றிருந்த மற்றோரு தமிழ்நாட்டு வீரர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகிவிட, நடராஜனுக்கு இந்திய அணிக்காக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் களம் இறங்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் 3- வது ஒருநாள் போட்டியில் நடராஜன் களம் இறங்கினார். 10 ஓவர்கள் வீசி, 70 ரன்கள் விட்டுக் கொடுத்த நடராஜன் , ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் லபுசெய்ன், ஆஸ்டன் ஏகர் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
களம் இறங்கிய முதல் ஒரு நாள் போட்டியிலேயே நடராஜன் இரண்டு விக்கெட்டுகளுடன் எண்ணிக்கையை தொடங்கியிருப்பது தமிழக மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் நடராஜனை ஏலம் எடுத்தது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரேந்திர சேவாக் மனம் திறந்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு பிரிமியர் லீக் என்ற ஒரு தொடரில் மட்டுமே விளையாடிய ஒரு வீரரை, வேறு எந்த கிரிக்கெட் தொடரிலும் விளையாடிய அனுபவம் இல்லாத ஒருவரை இவ்வளவு தொகைக்கு வாங்கியது ஏன் என்று என்னிடத்தில் கேள்வி எழுப்பினர். நான் பணத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஆட்டத்தின் இறுதிக்கட்ட ஓவர்களில் கனகச்சிதமாக யார்க்கர்களை வீசுவார் என்றும் கேள்வி பட்டேன்.
இதனால், கடந்த 2017 ஆம் ஆண்டு ஏலத்துக்கு நடைபெறுவதற்கு முன்னதாக நடராஜன் பந்து வீசும் சில வீடியோக்களைப் பார்த்தேன். எங்களுக்கு அந்த சமயத்தில் டெத் பெளலர் இல்லாததால், இவரை கண்டிப்பாக ஏலத்தில் எடுத்து விட வேண்டுமென்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன்.
நான் நினைத்தபடி நடராஜனை ஏலத்தில் எடுத்தேன். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டு, அந்த சீசனில் பல போட்டிகளில் விளையாட முடியாமல் போய் விட்டது.
ஆஸ்திரேலியா தொடரில் டி 20 இந்திய அணியில்தான் இடம் பெறுவார் என்று கருதினேன். ஆனால், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பிடித்தது சர்ப்ரைஸாக அமைந்து விட்டது. .அவருக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த வாய்ப்பை நடராஜன் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.